அரியாலை இளைஞர் சுட்டுக்கொலை: அதிரடிப்படைச் சந்தேகிகளின் மறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில், இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல், எதிவரும் டிசம்பர் 26ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மணியந்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில், 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப் பட்டனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் டிசெம்பர் 26ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

59f2ea9cf1a2b-IBCTAMIL