தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தில் அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகளைக் கொன்ற சென்னைத் தொழிலதிபரின் உருக்கமான கடிதத்தில் எழுதிய வாசகம் அனைவரையும் கலங்கவைத்துள்ளது.
சென்னைப் பல்லாவரம் அடுத்துள்ள பம்மலில் அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்கு பேரை சென்னைத் தொழிலதிபர் தாமோதரன் கொலை செய்தார். பிறகு அவரும் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முன்பு தாமோதரன் 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தாமோதரன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “எஸ். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பிரகாஷ் என்ற தாமோதரன் எழுதிக் கொண்ட கடைசி கடிதம். நான் எவ்வளவோ முயற்சி செய்து ஜவுளி வியாபாரம் செய்துவந்தேன். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஜவுளி தொழிலில் வளர்ச்சியடைய முடியவில்லை. விலைவாசியும் அதிகமாக இருந்ததால் கடன் வாங்கி, கடன்வாங்கி இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தேன். கடன்கள்தான் அதிகமானதே தவிர தொழிலில் வளர முடியவில்லை.
தற்போது எனது கடன் அதிகமாகிவிட்டது. பணமதிப்பிழப்பால் என்குடும்பம் போல பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மாநில அரசோ, மக்களைக் கண்டுக்கொள்ளவே இல்லை. வெளியில் சொல்ல முடியாத பல இன்னல்களை மக்கள் தினம், தினம் சந்தித்து வருகிறார்கள். அதில் நானும் ஒருவன். நான் தனியாகத் தொழில் செய்கிறேன். நான் கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைத்ததே தவிர கொடுத்த இடத்திலிருந்து பணம் வர சற்று தாமதமாகியது. என்னால் தொழில் நடத்த முடியாததால் எனது மொத்த குடும்பத்தினரையும் என்னுடன் அழைத்துச்செல்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.

அடுத்த கடிதத்தில், அன்புள்ள குமாரவேல் என்கிற ராஜாவுக்கு எழுதிக்கொள்வது உன்னிடம் நான் பலமுறை தொழில் செய்வதற்கு பணம் வாங்கினேன். எனக்குக் கொடுத்து உதவினாய். ஆனால் எனது தொழில் மேலும், மேலும் மந்தமாகிக் கொண்டே சென்றதால் என்னால் வசூல் செய்து கொடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நான் மட்டும் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எனது குடும்பம் நான் இருக்கும்போதே மிகவும் சிரமப்படுகிறது. நான் இறந்தும் சிரமப்பட எனக்கு மனம் வரவில்லை. இதனால் எனது குடும்ப உறுப்பினர்களையும் நான் என்னுடன் கொண்டு செல்கிறேன். இந்த முடிவுக்கு என்னைத் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர்விட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இதையடுத்து, தாமோதரன் வங்கி விவரங்கள், ஆவணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு இரண்டு பக்க கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘பிரகாஷ் கிளாத் ஸ்டோர்ஸ் என்ற எனது கடையில் கல்லாப்பெட்டி அருகில் எனது ஆவணங்கள் உள்ளன. எனது நகைக்கடன் மற்றும் இதர விவரங்கள் எனது வசூல் பையில் உள்ளது. எனது டாக்குமென்ட்டை வங்கியில் கொடுத்துள்ளேன். இத்துடன் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. தாமோதரனின் இந்த முடிவு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






