தடுமாறிய தினகரன்… விழுந்த கலைராஜன்… திணறிய தங்க தமிழ்ச்செல்வன்… ஜெ.சமாதியில்!

சென்னை அண்ணாசாலையிலிருந்து ஜெயலலிதா சமாதிக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்றார்.

அவர்களைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அவரின் ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையிலிருந்து பேரணியாகச் சென்றார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும், ஜெயலலிதா சமாதிக்கு அனுமதிக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அதனால், காவல்துறையினருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்துவதற்காகத் தினகரன், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மூன்று பேரும் தடுமாறினர். இதில் மலர்க்கொத்தை வாங்கிய கலைராஜன் கீழே விழுந்தார். தினகரன் நிலைதடுமாறி ஜெயலலிதா சமாதியில் ஏறிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் திணறிக்கொண்டே இருந்தார். ஜெயலலிதா சமாதியில் நடந்த இந்தத் தள்ளுமுள்ளு சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் டி.டி.வி.தினகரன் மலர் வைத்து அஞ்சலி செலுத்தும்போது, ஆதரவாளர்கள் நெருக்கியதால், டி.டி.வி.தினகரன் மற்றும் முன் வரிசையில் நின்றிருந்தவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. பின்னர், மிகுந்த சிரமப்பட்டு டி.டி.வி.தினகரன் கூட்டத்திலிருந்து வெளியே சென்றார். இரு அணியினரும் பேரணியாகச் சென்றதால் அண்ணா சாலையில் செல்ல வேண்டிய பேருந்து மற்றும் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. அதனால், சென்னை நகரம் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.