
டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலச்சந்திரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியன பின்வருமாறு, “தமிழகத்தில் 13 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோர பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர வாய்ப்புள்ளது. மேலும், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக, கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக கடலுக்கு சென்ற நிலையில், ஒகி புயலால் அவர்கள் கரை திரும்பவில்லை. இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






