சிரியா: ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 53 பேர் பலி

சிரியா

கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இத்தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் குழந்தைகள் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மாகாணங்களில் ஒன்றான டேர் அல்-ஜோரில் தாக்குதல் நடைபெற்ற இந்த கிராமம் உள்ளது.

பொதுமக்கள் குடியிருப்புகளில் நடைபெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாக அந்த கண்காணிப்பு குழு முதலில் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்திருக்கக்கூடும் என நம்பப்படுவதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் கண்காணிப்புக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.

“சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்புகள் மீதுதான் தாக்கியதாக கூறியுள்ளது.

சிரியா

சிரிய உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்தின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா இருந்து வருகிறது.

ஐ.நா ஆதரவுடன் அமைதி பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஜெனிவாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்னாள் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதிகளில், சிரிய அரசு துருப்புகள் நடத்திய தாக்குதலில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..

கிழக்கு கூத்தாவில் உள்ள பல நகரங்கள் வான்வழித் தாக்குதல்களாலும், பீரங்கியாலும் தாக்கப்பட்டன என ஆய்வு மையம் கூறியது

ஆனால் இதில் எந்த செய்தியும் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து, 120 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவிக்கிறது.

பல ஆண்டுகள் முற்றுகைக்குப் பின், கிழக்கு கூத்தாவில் 4 லட்ச குடியிருப்புவாசிகளின் நிலைமை மோசமாக உள்ளதென்றும், பலர் பட்டினியால் இறந்திருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அங்கு ஏற்பட்ட உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள், விலங்குகளுக்கான தீவனம் மற்றும் குப்பையை கூட உண்ணுவதாக, கடந்த வாரம் ஐ.நா அறிக்கை அளித்தது.