கட்சிக்குள் வலுக்கும் உட்பூசலினால் உடையும் விமலின் பஞ்சாயுதம்!!

விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துள்ளதால் இரண்டாக உடையும் அபாயத்தை அக்கட்சி எதிர்கொண்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து பிரியஞ்சித் வித்தாரண விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்கவும் விரைவில் வெளியேறுவார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.கட்சிக்குள் தனிநபர் ஆதிக்கம், பஸில் எதிர்ப்புக் கொள்கை உட்பட மேலும் சில காரணங்களாலேயே வீரகுமார திஸாநாயக்க எம்.பி. கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும், அவருடன் இணைந்து மேலும் சில உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்கின்றனர் என்றும் தெரியவருகின்றது.எனினும், வீரகுமார திஸாநாயக்கவைத் திருப்திப்படுத்தி, கட்சி இரண்டாக உடையாமல் தடுப்பதற்குரிய முயற்சியில் குழுவொன்று இறங்கியுள்ளது. இதன்படி சமரச முயற்சிகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பியசிறி விஜேநாயக்க அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரே உட்கட்சி மோதல் பூதாகரமாகியது. பஞ்சாயுதமே விமலின் கட்சி சின்னமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியே தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், அக்கட்சி இரண்டாக உடையும் பட்சத்தில் அக்கட்சியின் பரப்புரைப் பலம் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தரப்புடன் வீரகுமார திஸாநாயக்க அணி இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருந்தாலும் அதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.