மாவீரர்க்கு இறுதிவணக்கம்! – ‘தமிழ் ஈழ’ அரசில் நடந்தது என்ன?

ஈழம் இன்று

”…………………………………….

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! – இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே!

…………………………………….” எனும் புதுவை ரத்தினதுரையின் உள்ளீர்க்கும் சொற்களையும் மீறிய உணர்வலைகள், ஈழத்தமிழர் தாயகமான வட-கிழக்கு இலங்கையில் இன்னும் பொங்கிப் பிரவாகம் எடுக்கச் செய்யும் ஒரு வரலாற்றுப் பண்பாட்டு நிகழ்வான மாவீரர் வாரம், தொடங்கியுள்ளது!

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை, யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளான வீடு ஒன்றிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வந்து, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவு ஓடி சக போராளிகளிடம் தன்னுடைய ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு, கீழே சரிந்தார் அந்தப் போராளி; அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் உயிருக்கு அபாயம் ஏற்பட, கடுமையான கடல் முற்றுகையைத் தாண்டி, ஒரு வாரத்துக்குப் பின்னர் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டார்; ஆனால், சிகிச்சையால் இயற்கையை வெல்லமுடியாமல் போக, லெப்டினெண்ட் சங்கர் எனும் வீறுகொண்ட அந்தப் போராளி, தன் இயக்கத்தின் தலைவனும் தளபதியுமாக இருந்த பிரபாகரனின் மடியில் சரிந்து, உயிரியக்கத்தை நிறுத்திக்கொண்டார். அது, 1982 நவம்பர் 27 மாலை 6.05 மணி! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் களப்பலி, லெப்டினெண்ட் சத்தியநாதன் சங்கருடையது!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் இருந்தநிலையில், 1989-ம் ஆண்டில் அதே நாளில் அவ்வியக்கத்தின் சார்பில், நவம்பர் 27-ம் நாளானது ’மாவீரர் நாள்’ என முதல்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. அங்கிருந்து 1995-ல் லட்சக்கணக்கான மக்களுடன் புலிப்போராளிகள் வன்னிக்கு இடம்பெயர்ந்த பின்னரும் மாவீரர் நாளானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போதும் ஈழவிடுதலைப் போராளிகள் இயக்கம் ராணுவரீதியாக அழிக்கப்பட்டுள்ளபோதும், கார்த்திகை மாதம் என்றாலே மாவீரர் மாதம் என்கிறபடியாக, சிங்களப் பேரினவாதத்தின் நுகத்தடியின் கீழ் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்முயிரைத் தந்துசென்ற மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, மரம் நடுகை போன்ற மனதை நனைக்கும் செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றன.

கோயில்கள், தேவாலயங்கள், பிற வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் மதநிகழ்வுகளைவிடக் கூடுதலாக, தமிழீழத்து மக்களின் உயிரில்கலந்த உணர்வாக, ஒரு துன்பியல் பண்பாட்டு நிகழ்வாக, மாவீரர் வீரவணக்க நிகழ்வு இருக்கிறது.

மாவீரர் 6

இதுகுறித்து இன்றைய இளம் தலைமுறையினரின் உணர்வு என்ன என்பதை அறிய, இறுதிப்போரின் முடிவுவரை களத்தில் இருந்து செய்திகளை வழங்கியவரும், முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் நெஞ்சில் குண்டுபட்டு படுகாயம் அடைந்து உயிர்தப்பியவருமான வன்னி செய்தியாளர் சுரேன் கார்த்திகேசுவிடம் பேசினோம். வதைமுகாமிலும் சிக்கி அங்கிருந்து தப்பி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்று, அங்குள்ள வான்கூவரில் தற்போது ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவருகிறார்

வன்னியிலிருந்து வெளியான ’ஈழநாதம்’ நாளேட்டில் பணியாற்றிய இவரின் குடும்பத்திலிருந்தும் இரண்டு சகோதரர்கள் மாவீரர்களாகி காற்றோடு கலந்துபோனார்கள். சிறுவயது முதலே மாவீரர் ஊர்திகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர், அது விளைவித்திருக்கும் வீரமும் தீரமும் இன்னும் குறையாதவராகவே பேசினார்.

“மாவீரர் நாள் ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு மாவீரருக்கும் தனிப்பட்ட இறுதிமரியாதை செலுத்துவதும் பெரும் நிகழ்வாக இருக்குமாமே?”

“ஆமாம். இயக்கம் மட்டுமில்ல, ஒட்டுமொத்த மக்களும் மாவீரர்க்கு நினைவு வணக்கம் செலுத்தும். சண்டைக்களத்தில ஒரு போராளி வீரச்சாவு அடைந்துவிட்டாரெனில் இயக்கத்தின் (விடுதலைப் புலிகள்) கோட்ட அரசியல் துறை, அந்தப் பிரதேசத்தில் இருக்கிற, குறித்த போராளியின் குடும்பத்துக்கு தகவலை அறிவிக்கும். வீரச்சாவடைந்த போராளியின் வித்துடலை அவருடைய சக போராளிகள், இறுதியாக அவரோடு சண்டையில நின்றவர்கள், சொந்த இடத்துக்குக் கொண்டுபோவார்கள். ஒரு நாளோ இரண்டு நாளோ உறவினர்கள், பொதுமக்கள் வணக்கத்துக்குப் பின்னர், மஞ்சள் சிவப்பு நிறத்தில அலங்கரிக்கப்பட்டிருக்கிற மாவீரர் ஊர்தியில் அந்த மாவீரரின் வித்துடல் கொண்டுசெல்லப்படும், வித்துடலுக்குப் பக்கமாக ஆயுதம்தாங்கிய போராளிகள் சீருடைகளுடன் அமர்ந்திருப்பார்கள். மாவீரரின் வித்துடல் அந்தப் பகுதியில உள்ள மாவீரர் மண்டபத்தில வைக்கப்பட்டு, வீரவணக்கக் கூட்டம் நடைபெறும். சக போராளிகளும் பெரும்பாலும் அந்தப் போராளியினது பொறுப்பாளரும் அதில் உரையாற்றுவார்கள். பிறகு அந்த வித்துடலை மாவீரர் துயிலுமில்லம் நோக்கி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போவார்கள்.

முன்னுக்கு ஒரு வாகனத்தில் வீரச்சாவடைஞ்ச போராளி பற்றி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டே போவார்கள். பின்னணியில் மெலிதான ஒரு சோக இசை ஒலிபரப்பாகும். அதக் கேட்டு வழியால நிக்கிற மக்கள் மலர் வணக்கம் செய்வார்கள். அந்தப் பாதையால இருக்கிற வீடுகளில குத்துவிளக்கு ஏற்றிவச்சும் வீரச்சாவடைந்த மாவீரருக்கு மரியாதை செய்வார்கள். இதையெல்லாம் விடுதலைப்புலிகளோட கட்டளையால ஆரும் செய்யிறதில்ல.. மக்களின்ர மனசில இருந்து வாற உணர்வுதான்..!

சுரேன் கார்த்திகேசுதுயிலுமில்லத்தை நெருங்கும் முன்னரே ஊர்தி நிறுத்தப்பட்டு, வித்துடலை அவருடைய சக போராளிகள் தோளில் சுமந்து நகர்ந்துசெல்வார்கள்.. ராணுவ அணிவகுப்பு அதற்கு முன்பாக இடம்பெறும். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரதான மேடையில வித்துடலை வைப்பார்கள். கூடியிருக்கிற மக்களுக்கு முன்னால அந்தத் துயிலுமில்லப் பொறுப்பாளர் உறுதியுரை வாசிப்பார். அது முடியவும் வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற ஆயுதம்தாங்கிய போராளிகள், மூன்று முறை வேட்டுகளை (சுட்டுத்) தீர்ப்பார்கள். அப்போது, மாவீரர்க்கான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ எனும் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்படும். பின்னர் அனைவரும் வித்துடலின் மீது மலர்களைத் தூவ.. போராளியின் வித்துடல் அங்கு விதைக்கப்படும்.” வித்துடல் விதைக்கப்படும் நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்கெடுத்திருப்பார்கள்.. அந்த இடம் எப்போதும் ஒரு புனிதத்தன்மை வாய்ந்த உணர்வைக் கொடுப்பதாகவே உணரமுடியும்..

”கடைசியாக எங்கெங்கு துயிலுமில்லங்கள் இருந்தன?”

“கிளிநொச்சியில முழங்காவில், கனகபுரம் மற்றும் தேராவில் முல்லைத்தீவில முள்ளியவளை, ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேவிபுரம், இரணைப்பாலை, வலைஞர் மடம் மற்றும் முள்ளிவாய்க்கால்… இவை வன்னியில் குறிப்பிடத்தக்கவை.. ஆனால், ஏனைய தாயக மாவட்டங்களிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தன.. ஆனால் இன்று அவை அனைத்துமே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவான துயிலும் இல்லங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன..

“இறுதிமரியாதை செலுத்துவதில் அதிகாரநிலைக்கு ஏற்ப மாறுபாடுகள் இருந்தனவா?”

அப்படிச் சொல்லமுடியாது. வீரச்சாவடையும் போராளிக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பொறுத்து மட்டும் இதில் மாறுபாடு காணப்பட்டது. இறுதிப்போருக்கு முன்னரே வீரச்சாவடைந்த தளபதி பிரிகேடியர் பால்ராச் அண்ணையின் வீரவணக்க நிகழ்வுக்கு முன்னர், அந்த வித்துடலானது வன்னி முழுக்க எடுத்துச்செல்லப்பட்டது. மற்ற பிரதேசங்களில் இருக்கும் மாவீரர் மண்டபங்களைப் போல அல்லாது, கிளிநொச்சியில் திரளான மக்கள் கூடவசதியாக அமைக்கப்பட்டிருந்த கலாசார மண்டபத்தில், பால்ராச் அண்ணையின் வித்துடல் வைக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசின் விமானப்படையின் மிகை ஒலி விமானங்கள் அங்கு திரண்டிருந்த மக்களை மிரட்டும்வகையில் தாழப் பறந்து எச்சரித்திருந்தன. தாக்குதல் நடத்துவது போலவே அவற்றின் செயற்பாடுகள் அன்று அமைந்திருந்தன.. ஆனால் மக்கள் எவரும் அங்கிருந்து அகன்று செல்லவில்லை..

மாவீரர் 4

“மாவீரர் வாரம் எப்படியாக இருந்தது, ஈழத்து மண்ணில்?”

94 வரை நவம்பர் 21-ம் நாள் தொடக்கம் 27-ம் நாள்வரை மாவீரர் வார நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. 95-ல் யாழ்ப்பாணத்திலிருந்து (புலிகள் இயக்கம்) வன்னிக்கு இடம்பெயர்ந்தபின்னர் இறுதிவரை நவ.25 தொடக்கம் 27 வரை மூன்று நாள்களுக்கு மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடாத்தப்பட்டது. மக்களைப் பொறுத்தவரை, நவம்பர் 15-ம் நாள் வந்ததுமே அவரவர் ஊரில் மாவீரர் வணக்க நிகழ்விடங்களை சுத்தம்செய்யத் தொடங்கிவிடுவார்கள். வீதிகள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படும். மாவீரர்களின் பொது உருவங்கள் தாங்கிய பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்படும். அனைத்து மக்களும் தங்கள் பகுதிகளை அலங்கரிப்பார்கள்.. எங்குமே ஒருவகை புனிதமான உணர்வுநிலை காணப்படும்! தேசிய அளவில் நவம்பர் 25 காலை 8 மணிக்கு வீரவணக்கத்துக்காக அனைவரும் தயாராகியிருப்பார்கள்.

பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியக் கொடி, தலைவரால் (பிரபாகரனால்) ஏற்றப்படும். சமநேரத்தில் பிற அனைத்து இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் முதலில் பொதுச்சுடர் ஏற்றப்படும். தொடர்ந்து கொடிவணக்கத்துடன் தேசியக்கொடி ஏற்றல் நடைபெறும். தேசியக் கொடி ஏற்றப்படும்போது “ஏறுது பார் கொடி.. ஏறுது பார்…” என்ற பாடல் இசைக்க கொடி ஏற்றுவார்கள். மார்புக்கு நேராக கையை நீட்டி அகவணக்கம் செய்தலும் அடுத்தடுத்து நடைபெறும். நிறைவாக மாவீரர் நினைவாக உரைகள் இடம்பெறும். மாலை 6 மணிக்கு முன்னதாக தேசியக்கொடி இறக்கப்படவேண்டும். மறுநாளும் இதே நிகழ்வுகள் தொடரும்.

27-ம் தேதி தாயகம் எங்குமே உணர்வுமயமாகக் காணப்படும்… அனைத்து மக்களும் ஒருசேரக் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை போலவே, அந்த நாள் அமைந்திருக்கும்.. சிறப்புப் போக்குவரத்துகள.. மலர்களைப் பறிப்பதற்காகவும் மாலைகளைக் கட்டுவதற்காகவும் பெண்களும் சிறார்களும் கூடுவார்கள்.. ஒருவிதமான சோகம் கலந்த உற்சாகம் அனைவரிடமும் இருக்கும்.. மதியம் தாண்டி மக்கள் அருகில் இருக்கும் அல்லது தங்கள் உறவுகள் விதைக்கப்பட்டிருக்கும் துயிலும் இல்லங்களுக்குப் படையெடுப்பார்கள்.. வயோதிபர்கள் மட்டுமே வீடுகளில் நின்றிருப்பார்கள்.. நேரம் செல்லச்செல்ல துயிலும் இல்ல வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துகாணப்படும்..

நினைவுத்தூபிகள் (வித்துடல்கள் கிடைக்கப்பெறாத மாவீரர்கள் குறிப்பாக கரும்புலிகள் உட்பட்டவர்களுக்காக அமைக்கப்படுபவை), கல்லறைகள் சூழ மக்கள் காணப்படுவார்கள்.. ஒவ்வொரு கல்லறைக்கும், தூபிகளுக்கும் மாலைகள் அணிவித்து.. கண்ணீர் மல்ல அனைவரும் திரண்டிருப்பர்.

மாவீரர் லெப்டினன் சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த 6.05 மணிக்கு முன்பாக அந்த நேரத்துக்கு வழிவிடும் வகையில் முன்னதாக, தலைவர், மக்களுக்கு ஆற்றும் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பாகும்.. தாயகத்தில் எங்கும் விடுதலைப்புலிகளின் புலிகளின்குரல் வானொலி காற்றலையை அலங்கரிக்கும்… நிசப்தத்தின் பொழுதில் தலைவரி கம்பீரக் குரலில் உரை ஒலிக்கும்.. உரை ஒலித்து ஓய்ந்த மறுகணம்.. மணி ஒலிக்கும்…“இப்பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றுவார்” என்ற அறிவிப்பு வெளியாகியதும்.. துயிலும் இல்லங்களில் நின்றிருக்கும் பெற்றோர், உறவுகள் அங்கு தயார் நிலையில் காணப்படும் சுடர்களை ஏற்றுவார்கள்..

சமநேரத்தில், “…தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! ..” பாடல் ஒலிக்கும்.. அதேவேளை.. கோயில்கள், பொது இடங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் சுடர் ஏற்றப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்துவார்கள்..