வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்த முஸ்லீம்களின் கடைகளில் தீ பரவியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…..
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அண்மையில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டதாக தெரிவித்து அண்மையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட கடைகளில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.
இரு வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து பள்ளிவாசலில் தங்கியிருந்தவர் வெளியில் வந்து பார்த்தபோது கடையொன்று தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலமாக குறித்த சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து பலரும் கூடி தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
எனினும் தீயை கட்டுப்படுத்த முடியாமையினால் நகரசபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தி தீ கட்டுப்படத்தப்பட்டபோதிலும் இரு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் எரிந்துள்ளது.
இதேவேளை சம்பவத்தை பார்வையிட வருகை தந்திருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சுமார் 1.30 மணியளவில் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக இப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.பெற்றோல் குண்டே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பள்ளியில் உடனடியாக அறிவித்தல் வழங்கப்பட்டது. அச்சமயம் இருவர் இப்பகுதியில் இருந்து ஓடியதை சிலர் அவதானித்துள்ளனர்.இது விசமிகளின் சதி முயற்சியாகவே இருக்கும்.
அத்துடன் இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இக் கடைகளை எடுக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் அதன் தொடராகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவை காண்போம் என தெரிவித்தார்.






