ஏவுகணைகளை தகர்ப்போம்: வடகொரியா விவகாரத்தில் சீனா ரஷ்யா கூட்டணி

வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை தகர்க்க ரஷ்யா மற்றும் சீனா முடிவெடுத்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நடவடிக்கையின் முதல்படியாக இரு நாடுகளும் இணைந்து அடுத்த மாதம் சீனா தலைநகர் பீஜிங்கில் பயிற்சியில் ஈடுபடவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

தென் கொரியாவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை சீனா மற்றும் ரஷ்யா ஒன்றிணைந்து கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் குறித்த இரு நாடுகளையும் சமாதானப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளால் கொரியா தீபகற்பத்தில் மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என இரு நாடுகளும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டன.

அமெரிக்காவின் THAAD அமைப்பால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழலாம் என சீனா அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே ரஷ்யாவுடன் இணைந்து பீஜிங்கில் வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி முடிய ஏவுகணை எதிர்ப்பு ஒத்திகைக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்து நடவடிக்கை மெற்கொண்டு வருகின்றன.