இராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிம்பாப்வே ஜனாதிபதி முகாபே முதல் தடவையாக நேற்று வெள்ளிக்கிழமை பொது இடத்தில் தோன்றியுள்ளார். அவர் தலைநகர் ஹராரேயில் இடம்பெற்ற பட்டமளிப்பு வைபவத்தில் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் கலந்து கொண்டார்.
சிம்பாப்வேயில் நீண்ட காலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த அவருக்கு பதவி விலகுவதற்கு கடும் அழுத்தம். கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர் பதவியைத் துறக்க மறுப்புத் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
அந்நாட்டின் கட்டுப்பாட்டை இராணுவம் கடந்த புதன்கிழமை கைப்பற்றியதையடுத்து ரொபேர்ட் முகாபே ஹராரே நகரிலுள்ள 5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான அவரது வீட்டில் இராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தென் ஆபிரிக்க அபிவிருத்தி சபையைச் சேர்ந்த இரு தூதுவர்களும் இராணுவத் தலைவரும் 93 வயதான முகாபேயுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.
இதன்போது அவருக்கு பதவி விலகுவதற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முகாபே பதவி விலகுவதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
முகாபேயுடனான மேற்படி பேச்சுவார்த்தையானது அவருக்கு பல ஆண்டு காலமாக பழக்கமான ரோமன் கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பிடெலிஸ் முகோனோரியின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்றது.
முகாபேயுடன் அந்த வீட்டில் அவரது மனைவி கிரேஸும் இருந்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது உரையாடப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படாத போதும், முகாபே பதவி விலகுவதற்கு இணங்க மறுத்திருந்ததாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
முகாபே உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் தஸ்வான்கிரே தெரிவித்துள்ளார்.
முகாபே தனக்குப் பின்னர் தனது மனைவி கிரேஸ் ஜனாதிபதியாக பதவியேற்பதை உறுதி செய்யும் முகமாக உப ஜனாதிபதி எமர்ஸன் மனான்கவாவை கடந்த வாரம் பணி நீக்கம் செய்தததையடுத்து, இராணுவமானது அந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது.
எனினும் மேற்படி ஆக்கிரமிப்பு நடவடிக்கை சதிப்புரட்சியொன்று அல்ல என அந்நாட்டு இராணுவம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு இராணுவம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் ரொபேர்ட் முகாபேக்கு பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுக்
கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அந்நாட்டில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதற் கொண்டு ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் ஆட்சி
அதிகாரத்தில் இருந்து வருகிறார்.






