ரெய்டு பீதி… அணிமாறும் மனநிலையில் ‘பெங்களூரு’ புகழேந்தி?

சசிகலா அணியின் போர்க்குரலாக மீடியாக்களில் வெளிப்படுகிறவர் புகழேந்தி. கர்நாடக மாநில அம்மா அணிச் செயலாளர். ரெய்டுக்குப் பின் ஏற்பட்ட கலக்கத்தால் புகழேந்தி, அணி மாறப் போவதாகக் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க. அம்மா அணி தரப்பில், கேட்டோம். “சசிகலா குடும்பத்தார், அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் ஐந்து நாள்கள் சோதனை நடத்தினர். இதுபற்றி அம்மா அணிப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ‘சசிகலா குடும்பத்துக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தவே வருமானவரிச் சோதனை என்கிற நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதற்கான ஒத்திகை நடக்கிறதோ என்று மக்கள் கருதுகின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

pukalenthi‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகுறித்த சி.டி. தம்மிடம் இருப்பதைத் தேடுவதற்காகவே இந்த ரெய்டு’ என நடவடிக்கைக்கு முன்னரே, டி.டி.வி. தினகரன் கூறியிருந்தார். தினகரன், சசிகலா வீடுகளில் சோதனை நடந்ததுபோலவே அன்று திவாகரன் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  திவாகரன், ‘தினகரன் குறிப்பிட்ட சி.டி-யைத் தேடியே, வருமானவரித் துறையினர் வந்தனர்; என்னிடமும் சி.டி-யைத்தான் கேட்டனர்’ என்றார்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணிச் செயலாளர் புகழேந்தியோ, ‘வருமானவரித் துறையினர் என்னிடம் சி.டி. பற்றி கேட்கவில்லை. யாரிடமும் கேட்டதாகக்கூட நான் கேள்விப்படவில்லை’ என்று சொன்னார். திவாகரன் – தினகரன் எதிரெதிர் துருவங்கள் என்று சொல்லப்படும் வேளையில், புகழேந்தியின் இந்தப் பேட்டி யாரைச் சூடாக்கியதோ தெரியவில்லை. முதலமைச்சரைத் தேடி, புகழேந்தி கோட்டைக்குப் போகிறார் என்று வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அவர்கள் மீண்டும் வெளியே வர கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்  ஜாமீன் கொடுக்க வேண்டும். அப்போது, ஜெயலலிதாவுக்குப் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், இளவரசிக்குப் புகழேந்தியும் ஜாமீன் கையெழுத்துப் போட்டார்கள். சசிகலா, சுதாகரனுக்குக் கர்நாடக நண்பர்களை வைத்து புகழேந்தி, ஜாமீன் கையெழுத்துப் போடவைத்தார். இப்போது சொல்லுங்கள்… புகழேந்தியா எங்களை விட்டுப் போய்விடுவார்? அடுத்து, நாஞ்சில் சம்பத்தை இங்கிருந்து கிளப்பிவிடவும் வேலைகள் நடக்கிறது” என்றனர்.

இதுகுறித்து புகழேந்தியிடம் பேசினோம். “டி.டி.வி தினகரன் வழியில் பயணம் நில்லாமல் தொடரும். இந்த வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. அது கனவிலும் நடக்காது. ‘ரெய்டுகள்  வந்ததற்காக அணி மாறப் போகிறார்கள்’ என்ற வதந்தியை வாட்ஸ்அப்பில் கிளப்பி விட்டிருக்கிறார்கள். நான் முதலமைச்சரைச் சந்திக்கக் கோட்டைக்குக் கிளம்பியே விட்டதாக அந்த வாட்ஸ்அப் செய்தி சொல்கிறது.

மாண்புமிகு அம்மா முதன்முதலில் 21 நாள்கள் கர்நாடகச் சிறையில் இருந்தபோது, தமிழகத்தில் இருந்துவந்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை அங்கு நான்தான் தங்கவைத்தேன். இதற்காக நூற்றுக்கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுத்தேன். இந்தச் செலவினங்களுக்காக அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ, டி.டி.வி-யிடமோ ஒரு ரூபாய்கூட கைநீட்டி வாங்கவில்லை. இன்றுவரை அப்படியேதான் இருக்கிறேன்.
அம்மா அணி சார்பில் புகழேந்தி பேட்டி
தொடர்ந்து இப்படி அவதூறு பரப்புகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கட்சிக்குப் பாடுபட்ட சில முக்கியமான நபர்களுக்கு டி.டி.வி., இதுவரை உரிய பொறுப்புகளை வழங்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. நாஞ்சில் சம்பத்துக்கும் இருக்கிறது. நாங்கள் பதவிகளைக் கேட்பது எங்களுக்கு அல்ல… இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்காத அந்தச் சகோதரர்களை உற்சாகப்படுத்த மட்டுமே. இந்த இயக்கத்தை இன்னும் வலுவாகக் கொண்டுசெல்ல மட்டுமே. இப்படிப்பட்ட வருத்தங்கள் கட்சியில் இருக்கத்தான் செய்யும். பொதுவாகவே குடும்பம் என்றால், இதுபோல் வருத்தங்கள் இருப்பது இயல்புதான். ‘குடும்பத்தில் வருத்தம் இருக்கிறதே’ என்று அதைத் தங்களுக்கான ஆதாயமாக அறுவடை செய்ய நினைப்பவர்கள் அநியாயத்துக்கு ஏமாந்துதான் போவார்கள்”. இன்று அம்மாவின் வீட்டில் ரெய்டு நடத்திப் பார்க்கிறார்கள்…

இந்த நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் யாருமே சென்னையில் இல்லை. தெய்வத்தின் இல்லத்தில் நடத்தப்படும் ரெய்டு, மன வேதனையைத் தருகிறது. இதற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆகவேண்டும். அம்மாவால் பதவியைப் பெற்ற எந்த அமைச்சரும், ரெய்டு நடந்த இடத்துக்கு வரவில்லை. ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.  இதே ரெய்டு முதலமைச்சர், அமைச்சர்கள் வீடுகளில் வெகுவிரைவில் நடக்கும்.” என்றார், புகழேந்தி.