புத்தரின் படத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு, 6இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சிறிலங்கா வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணியான, நயோமி மிச்சேல் கோல்மன், வலது கையில் புத்தரை பச்சை குத்தியிருந்தார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதுதொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது, இந்த வழக்கில் இன்று நீதியரசர்கள் அனில் குணரத்ன, ஈவா வணசுந்தர, நளின் பெரேரா ஆகியோர், தீர்ப்பை அறிவித்தனர்.
பிரித்தானிய சுற்றுலாப் பயணி தனது உடலில் பச்சை குத்திக் கொள்வது அவரது அடிப்படை சுதந்திரம் என்றும், அவரை கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
மனுதாரரான சுற்றுலாப் பயணிக்கு 5 இலட்சம் ரூபாவை அரசாங்கம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும், அவரைக் கைது செய்வதற்குப் பொறுப்பாக இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழாம், வழக்குச் செலவான 2 இலட்சம் ரூபாவையும் அரசாங்கமே செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.