5 ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஊட்டி: வரும் 2018 மார்ச் மாதத்திற்குள் 5 ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகளை முடிக்க அனைத்து வக்கீல்கள் மற்றும் நீதிமன்றங்கள் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்டு கொண்டார். ஊட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழா, பழங்குடியினர் கலாச்சார மையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் பேசியதாவது: குறுகிய காலத்தில் விரைவாக நேர்மையான நீதிகளை வழங்க வேண்டும். 20 ஆண்டுக்குப்பின் ஒரு நீதியை வழங்குவது தேவையற்றது. அது இறந்த தீர்ப்புக்கு சமம். காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். அதேபோல், அவசர ேகாலத்தில் வழங்கப்படும் நீதிகள் புதைக்கப்பட்ட நீதிகளாகும். வக்கீல்கள், தங்களிடம் வரும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் நேரத்தை வக்கீல்கள் வீணடிக்காமல் வழக்குகளை உரிய சாட்சி மற்றும் ஆதாரத்தோடு வாதாடி முடிக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவுபடி வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

images (69)இதற்கு அனைத்து வக்கீல்கள் மற்றும் சட்டப்பணி ஆணைக்குழு ஆகியவை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு இந்திரா பானர்ஜி பேசினார்.
3400 பணியிடங்கள் உருவாக்கப்படும்:விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து ெகாண்டு பேசுகையில், ` தமிழகத்தில் 88 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிதாக ெதாடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றத்தின் ஒத்துழைப்புடன் விரைவில் தொடங்கப்படும். பல நீதிமன்றங்களுக்கும் 3400க்கும் மேற்பட்ட புதிய மற்றும் கூடுதல் பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்’ என்று அறிவித்தார்.