வழிகாட்டிய பதிகம்… வரம் தந்த சிவனார்!

சைவ சமய சந்தானக் குரவர்களில் முதன்மையானவர் மெய்கண்டார். சிவனருளால் கடலூர் மாவட்டம், பெண்ணா கடத்தில் (பெண்ணாடம்)அவதரித்தவர் இவர். சைவ சித்தாந்தக் கருத்துகளை 12 சூத்திரங்களில் சொல்லும் ‘சிவஞான போதம்’ என்னும் நூலை இயற்றினார்.

இவருடைய நூலைப் பின்பற்றியே அருணந்தி சிவாச் சாரியார் ‘சிவஞான சித்தியார்’ எனும் வழி நூலையும், உமாபதி சிவாச்சாரியார் ‘சிவப்பிரகாசம்’ என்னும் சார்பு நூலையும் இயற்றினர்.

பதிகத்தால் கிடைத்த வரம்!

பெண்ணாகடத்தில் சிவ பக்தியில் சிறந்து திகழ்ந்த தம்பதியர் அச்சுதக்களப்பார் – மங்களாம்பிகை. இவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஆதலால், தங்கள் குருநாதர் சதாசிவாச் சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர்.

குருநாதர், சிவனாரையும் அவருக்குப் பிரியமான திருமுறைகளையும் பூஜித்தார். அச்சுதக்களப்பாரிடம் ஒரு கயிற்றைக் கொடுத்து, திருமுறை ஏட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் வைக்கும்படிக் கூறினார். அந்தப் பக்கத்தில் திருஞானசம்பந்தர் திருவெண் காட்டில் அருளிய ‘பேயடையா பிரிவெய்தும்’ என்னும் பாசுரம் இருந்தது.

திருவெண்காட்டில் உள்ள முக்குளத் தீர்த்தத்தில் நீராடி சிவனாரை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற பொருளில் அமைந்த பதிகம் அது. அதன்படி அச்சுதக்களப்பாரும் அவர் மனைவியும் திருவெண்காடு சென்று வழிபட்டனர்.  அதன் பயனாக அவர்களுக்கு கி.பி. 1215-ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திருவெண்காட்டு இறைவனின் திருப் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

சிவ பக்தியோடு திகழ்ந்த சிறுவனை, அவனின் மாமா திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச்சென்று வளர்த்துவந்தார். மற்ற குழந்தைகளைப் போல் துறுதுறு என்று இல்லாமல், எப்போதும் மௌன நிலையிலேயே இருந்துவந்தான் அந்தப் பாலகன். மரு மகனின் நிலைகண்டு வருந்திய மாமா, அவனை பொள்ளாப்பிள்ளையார் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வந்த பரஞ்சோதி முனிவர், சிவனருள் பெற்ற குழந்தை அவன் என்பதை உணர்ந்து, தான் பெற்ற உபதேசத்தை அவனுக்குச் செய்வித்த தோடு, ‘மெய்கண்டார்’ என்று திருப்பெயரும் சூட்டினார். அதன் பின்னரே, ‘சிவஞான போதம்’ இயற்றினார் மெய்கண்டார். அவரின் பெயரால் இந்நூல் ‘மெய்கண்ட சாத்திரம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 16 வயது வரையில் வாழ்ந்த மெய்கண்டார், கி.பி. 1232-ம் ஆண்டு திருவெண்ணெய் நல்லூரில் இறைவனுடன் ஐக்கியமானார்.

மெய்கண்டார் ஆலயத்தில் குருபூஜை

பெண்ணாகடம் பேருந்து நிலையத் திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், வெள்ளாற்றின் கரையில் அழகுற அமைந்திருக்கிறது மெய்கண்டார் ஆலயம். முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து அமைந்த கருவறையில், வலக்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடக்கரத்தில் ஓலைச்சுவடி ஏந்தி தியான நிலையில் காட்சி தருகிறார் மெய்கண்டார்.

அர்த்த மண்டபத்தில் சந்தானக் குரவர்களான மறைஞான சம்பந்தர், அருள்நந்தி சிவாச்சாரியார் மற்றும் உமாபதி சிவாச்சாரியார் தரிசனம் தருகின்றனர். திருமுறைப்படி நித்திய பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில் நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டிக்கொள்கிறார்கள். பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கல்வி, கலைகளில் சிறப்புற்று விளங்குவர் என்பது நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொண்டு குழந்தை பெற்றவர்களும் இங்கு வசிப்பவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு மெய்கண்டார், ஞானம், உமாபதி என்று சந்தானக் குரவர்களின் பெயர்களையே சூட்டுகின்றனர்.

வரும் ஐப்பசி மாத, சுவாதி நட்சத்திரத்திரத்தன்று (20.10.17) குருபூஜை வைபவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. அன்று மெய்கண்டார் சப்பரத்தில் புறப்பாடாவார். அடியார்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு மகானின் திருவருளைப் பெற்று வரலாம்.

பிள்ளை வரம் பெறலாம்…

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ள நினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாந் தீவினையே

மெய்கண்டார் திருவவதாரம் நிகழக் காரணமான திருஞான சம்பந்தரின் பதிகம் இது. ஜாதக தோஷம் அல்லது வேறேதேனும் காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாதோர், நம்பிக்கையுடன் தினமும் இந்தப் பதிகத்தைப் பாடி, திருவெண்காட்டு ஈசனை வணங்கிவந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு முறையேனும் திருவெண்காடு மற்றும் பெண்ணாகடம் சென்று இரு தலங்களையும் தரிசித்து வருவது இன்னும் விசேஷம்.

8476575292_71ee4feea5_b