மோதி – அமித் ஷாவுடன் மோத பலம் பெற்றுவிட்டாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோதி – அமித் ஷா ஆகியோரின் கோட்டையான குஜராத் மாநிலத்திற்கு மேற்கொண்ட ஒரு விரைவு சுற்றுப்பயணம் அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு அமித் ஷா மேற்கொண்ட பயணத்தை என்னவென்று கூறுவது. சமூக ஊடங்களில் இந்த விடயம் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

201604220837548881_Priyanka-would-like-to-involved-in-serious-political-Rahul_SECVPF

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க, அமித் ஷா உடன் அங்கு சென்றார். வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான மேடையில் அமித் ஷா பேசிய நகை முரண் மிகுந்த பேச்சு அரசியல் ரீதியானதாக மட்டுமல்ல, ராகுல் காந்தியை குறி வைப்பதாகவும் இருந்தது.

அமேதி தொகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் ‘இளவரசர்’ குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் துணைத் தலைவர் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஆளாகியே வந்தார். அது வியப்பல்ல. ஆனால், ராகுல் காந்தியிடம் இருந்து எதிர்வினை வருவது வியப்பானதுதான். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின் உண்டான சரிவை அவர் சரி செய்துகொண்டுள்ளதைப் போலவே தோன்றுகிறது.

ஒரு செய்தி இணையதளத்தில் வெளியான பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் மகன், அரசியல் செல்வாக்கால் வியாபார முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான செய்தியை அவர் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

வழக்கமாக தனக்கு எதிராக பா.ஜ.க பயன்படுத்தும் சமூக வலைத்தளம் மூலமே அவர் இவ்விவகாரத்தில் பிரதமர் மோதியை தாக்க பயன்படுத்தினார்.

பிரதமர் மோதி இது போன்ற மோசமான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை இதுவரை தவிர்த்தே வந்தார். ஆனால், கடந்த 2014-இல் நடந்த தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக தன்னைத் தற்காத்துக்கொள்ள அமித் ஷா முயல்வதாகத் தெரிகிறது.

மோதி

ராகுல் காந்தி வலிமையாக உள்ள அமேதியில் வைத்து அவரைத் தாக்க முடிவு செய்தது தவறான முடிவு என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவரது கோட்டையில் வைத்தே அவரை தாக்குவது அவரை அரசியல் ரீதியாக சரிவடையச் செய்யுமா என்ற கேள்வி எழுகிறது.

ராகுல் முன்பும் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. பாஜக மீதான இந்த அழுத்தத்தை அவர் தேர்தல் நடக்கும் வரை தொடர்வாரா இல்லை இது வெறும் தற்காலிகமான ஒரு எழுச்சியா என்பதே அது.

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உற்று நோக்கினால், அவர்கள் ஓர் உக்கிரமான நிலையை எடுத்திருப்பதை உணர முடிகிறது.

ராகுல் காந்தி பிரதமர் மோதியை ட்விட்டரில் மோசமாக விமர்சிக்கும் அதே நேரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அரசுக்கு மிகவும் சங்கடம் ஏற்படுத்தக்கூடிய கேள்விகளை செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இன்னொரு காங்கிரஸ் தலைவரான ஆனந்த் ஷர்மா பிரதமர் இந்த விடயத்தில் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் பாஜகவை காங்கிரஸ் பின்வாங்க செய்துள்ளது.

அமித் ஷா

ஆனால் 2019-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வரை இதை நீடிக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு இப்போதைக்கு அந்த இரு கட்சிகளுமே பதில் சொல்ல முடியாது. பண மதிப்பு நீக்க நடவடிக்கியின்போதே பாஜகவை சரிவடைய செய்ய கிடைத்த வாய்ப்புகளை காங்கிரஸ் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு புறம், ராகுல் காந்தியின் தலைமை மீது அக்கட்சியில் நம்பிக்கை இன்மை நிலவுவதுபோல தெரிகிறது.

அவரை ‘பப்பு’ என்று சமூக வலைத்தளங்களில் அழைத்ததன்மூலம் பாஜக அவருக்கு கணிசமான சேதத்தை விளைவித்தது.

ராகுல் காந்தியால் மோதிக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க முடியுமா என்று சந்தேகம் சாமானியர்களிடம் நிலவுகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களாக மோதிக்கு எதிரான சூழல் திரும்புவதும், ராகுல் காந்தி மீண்டும் நிலை பெறுவதையும் காண முடிகிறது.

ஜெய் ஷா

அவர் சமீபத்தில் அமெரிக்காவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அவரது ஆதரவாளர்களை மட்டுமல்லாது நடுநிலையாளர்களாலும் பாராட்டப்பட்டது. அந்த உரையை விமர்சிக்க 13 ராஜாங்க அமைச்சர்களை பாஜக களம் இறக்கியபோதும் அது மக்களிடையே பெரிதாக ஒன்றும் எடுபடவில்லை.

ராகுலுக்கு எதிரான ஓர் எதிர்மறையான பிரசாரமாகவே அது பார்க்கப்பட்டது. அது பாஜகவுக்கே பின்னடைவாக இருந்தது.

ராகுல் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கப்படலாம் என்றும் அவரது தாய் சோனியா ஆலோசகராக செயல்படலாம் என்றும் ஊடகங்கள் கணிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில குழுக்கள் அவரை விரைவில் தலைவராக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

கட்சியில் அவரின் தகுதியை சந்தேகிப்பவர்கள் இப்போது யாரும் இல்லை. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளை அவர்கள் தற்போது சமாளித்தால் போதும்.

இளவரசர் மன்னராவதற்கான சூழல் தற்போது தெளிவாக உள்ளது போல தோன்றுகிறது.