பகலில் கண் தெரியாது… இரவில் பால்வெளியே தெரியும்… ஆச்சர்ய மனிதர்!

சுற்றி இருள் மட்டுமே தெரிகிறது. யாருக்கும் அசைந்து கொடுக்காத பேரிருள். நிகழ்வுகள், அருகில் இருக்கும் பொருள்கள் எதுவும் புலப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? பார்வை இல்லை என்று தானே? சற்றே மாற்றி யோசியுங்கள். சுற்றி அதீத வெளிச்சம். வெள்ளை நிறத்தைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நிகழ்வுகள், பொருள்கள்,… ம்ஹும், எதுவும் தெரியவில்லை. இதுவும் பார்வை குறைபாடுதான்.

டிம் டூஸெட்

கனடாவின் மூன்று கடல்சார் மாகாணங்களில் ஒன்று நோவா ஸ்கோடியா. அங்குதான் டிம் டூஸெட் (Tim Doucette) பிறந்தார். பிறந்தவுடன் மருத்துவர்கள் சொன்னது, “உங்களுக்கு congenital cataracts”. அப்படியென்றால் என்னவென்றே யாருக்கும் புரியவில்லை. பிறவியிலேயே கண்புரை, இதனால் அவருக்கு எப்போதும் கண் தெரியாது என்பது மட்டும் புரிந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இவரின் கருவிழியை மாற்றி அமைத்தனர். இதனால் ஒரு வித்தியாசமான மாற்றம் நிகழ்ந்தது. ஆயிரம் மின்னல்கள் கண்முன் தொடர்ந்து வெட்டினால் ஏற்படும் வெள்ளை நிறம் இவரைச் சூழ்ந்தது.

பகலில் அவரின் பார்வை வெறும் பத்து சதவிகிதம்தான். தட்டுத் தடுமாறிதான் தன் வேலைகளைச் செய்வார். ஏனென்றால் சுற்றி அவ்வளவு வெளிச்சம். இவர் கண்களுக்கு ஒளியைக் கட்டுப்படுத்தி உள்ளே எடுத்துக்கொள்ளத் தெரியாது. ஆங்கிலத்தில் overexposed என்பார்களே, அப்படித்தான். எல்லாம் வெள்ளைப் போர்வை போர்த்தி மூடப்பட்டிருக்கும். அதனால், கறுப்புக் கண்ணாடி எப்போதும் அணிந்திருப்பார். ஆனால், இரவு வந்துவிட்டால் போதும். அவர்தான் ராஜா. நம்மை விடவும் அவருக்குக் கண் நன்றாகவே தெரியும். இரவுக்கு ஆயிரம் கண்களா என்று தெரியாது. ஆனால், இவருக்கு இரவில் நிச்சயம் ஆயிரம் கண்களின் சக்தி உண்டு.

தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்பதை டிம் டூஸெட் பல காலம் உணரவே இல்லை. பதின்பருவத்தில், பார்வையைச் சீர்ப்படுத்த மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை செய்தனர். அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், இரவில் முதன் முறையாக வெளியே வந்தார். மேலே தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். ஒருவித பயம். லட்சம் மின்மினிப் பூச்சிகள், ஆயிரமாயிரம் மின் விளக்குகள் எல்லாம் வானத்தில், அதுவும் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் அதைப் பார்த்த பின்புதான் உண்மையை உணர்ந்தார். அது பூச்சிகளும் இல்லை, விளக்குகளும் இல்லை, அதுதான் நம் பால்வெளி மண்டலம்!

பால்வெளி மண்டலம் ஒரு பார்வை

ஆம். அதீத வெளிச்சத்தை அவர் கண்கள் தங்கு தடையின்றி உள்வாங்குவதால், அவரால் நம் கண்ணிற்குகூடத் தெரியாத நட்சத்திரக் கூட்டம் முதல், எண்ணற்ற வானியல் நிகழ்வுகள் இயல்பாகவே தெரியத் தொடங்கியது. இந்த வித்தியாசமான திறனைவைத்து என்ன செய்ய முடியும் என்று புரிந்து கொள்ளவே அவருக்கு பதினைந்து வருடங்கள் தேவைப்பட்டன. தன்னிடமிருந்த சொந்தச் சேமிப்பில், தன் வீட்டின் அருகே இருக்கும் மலையில் ‘டீப் ஸ்கை ஐ’ (Deep Sky Eye) என்ற பெயரில் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றைக் கட்டினார். அங்கிருந்து தொலைநோக்கி மூலம், விண்வெளி குறித்து தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல வானியல் ஆச்சர்யங்களைத் தொலைநோக்கியில் பார்த்தபோது விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இவர் கண்ணிற்கு புலப்பட்டது. உதாரணமாக, ஓரியன் நெபுலாவில் ஊதா நிறம் கலந்து இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

இவரைப் பொறுத்தவரை இரவு வானம் என்பது வெல்வெட்டால் உருவானது. மேலே வைரங்கள் பதிக்கப்பட்டு எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும். சோகம் என்னவென்றால், இவர் மனைவிக்கும் கண் தெரியாது. இரவில் தன் ஆராய்ச்சியின் போது, தன் மனைவியையும் அழைத்துச் சென்று தான் காணும் ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்குவார். இதுதான் இவரின் அன்றாட பணி.

“சிறு வயதில் எனக்குப் பார்வை இல்லை என்றபோது என்னை ஏளனம் செய்வார்கள். எனக்கும் வருத்தமாக இருக்கும். பிறரைப் போல் இயற்கையை ரசிக்க முடியாது, வாகனங்களை இயக்க முடியாது, வானை அளக்க முடியாது என்றெல்லாம் எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், எனக்கு நிகழ்ந்த மாற்றத்தால், இன்று வானை அளந்து கொண்டிருக்கிறேன். இரவு வானில், நீங்கள் பார்க்காததைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. நான் இப்போது ஓர் ஆரம்பநிலை வான் ஆய்வாளர். ஆனால், எனக்குக் கண் தெரியாது….” சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

Deep Sky Eye

பலருக்குச் சுற்றுலா தளம். விண்வெளியின் மேல் காதல் கொண்டவர்களை இன்முகத்தோடு வரவேற்கிறார். காணகிடைக்கா பிரபஞ்சத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார். விண்வெளி தொடங்கி, நிலா முதலிய பல கோள்களைத் தனது ஆய்வுக்கூடத்திலிருந்து ஆராய ஏற்பாடுகள் செய்துள்ளார். பிரபஞ்சத்தைக் கண்டு நமக்குக் கிடைத்த மாபெரும் வாழ்வைப் போற்ற ஊக்கப்படுத்துகிறார்.

“இரவு நேர வானைப் பார்க்கும் போதுதான், என்னுடைய இந்தக் கண் தெரியாத நிலை போன்ற பிரச்னைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். குறைகள் இருக்கும் என்னைப் போன்றோருக்கும், குறைகள் இல்லாத மனிதர்க்கும் ஒரே வானம்தான். ஆம். இந்தப் பிரபஞ்சத்திற்கு நாம் அனைவருமே ஒன்றுதான். வாழ்வை எதிர்கொள்ள இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் போதாதா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். இதற்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. கேள்வி புரிந்தாலே போதும்!