கொசு உற்பத்தியாக ஏதுவாக சுற்றுப்புறத்தை வைத்திருப்பவர்கள் மீது நாளை முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்து இருக்கிறார்.
சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த விதிக்கப்பட்ட 48 மணி நேர கெடு இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
தற்போது, டெங்கு விழிப்புணர்வு, துப்புரவு பணியின் போது ஒத்துழைக்காத 3 பேர் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு வைரஸ் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவதில்லை. ஏடீஸ் வகைக் கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலை மனிதர்களிடையே பரப்புகின்றன.
டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. கழிவு நீர், சாக்கடைப் போன்ற இடங்களில் இவை உற்பத்தியாவது இல்லை.
ஆறு, குளம், ஏரி, மரம் என இயற்கையான எந்த இடத்திலும் டெங்குவைப் பரப்பும் கொசு உற்பத்தியாவது இல்லை.
ஏடீஸ் கொசு முட்டையிடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களில் தான்.
நகர்ப்புறங்களில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதும், பள்ளி, அரசு அலுவலகம் போன்ற இடங்களில் குப்பை தேங்குவதும் டெங்கு பரவுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
இங்கெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் குவளை, காகிதக் குவளை, வாகன டயர், டப்பாக்கள், குளிர்பான பாட்டில், கேன், கண்ணாடிக் குவளை என தண்ணீர் தேங்கும் பொருட்கள் மிகுதியாக உள்ளன.
லேசான மழை பெய்தாலும் கூட இவற்றில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இப்படி தேங்கும் நன்னீரில்தான் ஏடீஸ் கொசுக்கள் முட்டையிட்டு, பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்றன.
எனவேதான், நகரங்கள், சிறு நகரங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராமங்கள் – என நகரம் சார்ந்த பகுதிகளையே டெங்கு அதிகமாக தாக்குகிறது. குப்பை தேங்காமல் தடுக்கும் சட்டவிதிகள் ஏற்கனவே உள்ளன.
இதன் அடிப்படையிலேயே நாளையில் இருந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காதர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.