தலைமன்னார் மீனவரைக் காணவில்லை; படகு மீட்பு!

தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடலில் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த திங்கட் கிழமையிலிருந்து குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

59d7ce2409db5-IBCTAMIL

சதீஸ் என அழைக்கப்படும் வி.அண்டன் குமார் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் ஐ.பி.சி தமிழிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

தலைமன்னாரைச் சேர்ந்த மேற்படி மீனவர் கடந்த திங்கட்கிழமையன்று மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் குறித்த நபர் தனது படகில் தனிமையிலேயே சென்றுள்ளதாக கூறிப்பிடபட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த திங்கட்கிழமையன்று மாலைவேளையில் தனது வீட்டுக்காரருடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பின்னர் கடலுக்குச் சென்ற நபரிடமிருந்து எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லையென்று கூறப்பட்டுள்ளது.

மூன்று நாட்களாகியும் குறித்த நபர் கரை திரும்பாத நிலையில் தலைமன்னார் மீனவர்களால் தீவிரமாகத் தேடப்பட்டுள்ளார். அதன்போது படகு ஒன்று கச்சதீவில் கரையொதுங்கியிருப்பதாக வேறு மீனவர்களால் கூறப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்தொழில் சங்கத்தினர் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவரது படகு கச்சதீவு பகுதியில் இயந்திரமற்ற நிலையில் கரையொதுங்கிக் காணப்பட்டுள்ளது. தற்பொழுது தலைமன்னார் கடற்தொழில் சங்கத்தினர் குறித்த படகினை கட்டியிழுத்து வந்துள்ளனர்.

காணாமற்போன மீனவர் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இயந்திரங்களற்ற நிலையில் குறித்த படகு கரையொதுங்கிக் காணபட்டமையினால் தலைமன்னார் மீனவர்களிடையே பலத்த சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளது.