தொண்டர் ஆசிரியர்கள் கல்வி வலயத்தை முற்றுகையிட்டு போராட்டம்!!

வவுனியாவில் தொண்டர் ஆசிரியர்கள் கல்வி வலயத்தை முற்றுகையிட்டு போராட்டம்!! மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!!

protest-10

வவுனியா மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தை இன்று (06) பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
வடமாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய பலருக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் அவர்கள் தெரிவு செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்கின்ற கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், பொய்யான ஒரு குற்றச்சாட்டை வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நேர்முகத் தேர்வில் 1046 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 676 பேருக்கு நிரந்தர நியமன் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதும் வெறும் 182 பேரின் பெயர் விபரங்களே தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்களை முழுமையாக கொண்டிருந்ததாகவும் ஏனையவர்களிடம் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்கள் முறையாக இல்லை எனவும் வடக்கு கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. ஆனால் எம்மிடம் முழுமையான ஆவணங்கள் உள்ளன.

அவற்றை அவர்கள் சரியாக பரிசீலிக்க தவறியுள்ளதுடன், அவ்வாறு முழுமையான ஆவணங்கள் அற்ற சிலரும் தற்போது தெரிவாகியுள்ளiமை நேர்முகத் தேர்வு குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

பாடசாலை சம்பவத் திரட்டு புத்தகத்தில் பெயர் இல்லை எனக் கூறியே பலர் புறக்கணிப்பட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு சரியான முறையில் பெயர் உள்ள பலரும் தற்போது தெரிவு செய்யப்படவில்லை. சம்பவ திரட்டுப் புத்தகத்தின் உண்மைப் பிரதியை ஆராயாது வெறும் போட்டோ பிரதி ஒன்றை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைத் தன்மையை நேர்முகத் தேர்வாளர்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்திய சம்பவ திரட்டுப் பதிவைக் கூட நிராகரித்துள்ள தேர்வாளர்கள், அதன் உண்மைப் பிரதியை பார்த்து பரிசீலிக்காததன் காரணமாகவே பலர் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.