வித்தியா வழக்கின் நிரபராதி மீண்டும் கைதுசெய்யப்பட்டார்? இன்று அவர் நிலை?

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றமற்றவரென தீர்ப்பாயத்தினால் விடுவிக்கப்பட்டு, அதே நாளில் பிறிதொரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

vithya-murders

இதற்கான உத்தரவினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வித்தியா வழக்கின் முதலாவது சந்தேக நபராக இலக்கம் குறிக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு நடைபெற்றிருந்த காலத்தில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்று பொலிஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அதாவது, “நான் இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை (குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்) வெட்டுவேன்” என நீதிமன்ற வாளகத்தில் வைத்து பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என்று ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் கடந்த மாதம் 27ஆம் நாளன்று தீர்ப்பாயத்தினால் விடுதலை செய்யப்பட்டு வெளியே வரும் நிலையில் இருந்தபோதே மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வித்தியா கொலைவழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கோபி என்னும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையானது, கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் வித்தியா கொலை வழக்கின் சாட்சியாக உள்ளதனாலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், வித்தியா கொலை வழக்கில் சட்டமா அதிபரினால் தீர்பாயத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரத்தில், கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியாக உள்ளாரா? இல்லையா? என்பதனை இந்த மன்று கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை உள்ளது என்று நீதவான் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அது தெரியவரும்பட்சத்தில்தான் குறித்த நபருக்கு எதிராக சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழா, அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழா வழக்கு நடத்த முடியும் எனும் தீர்மானத்திற்கு வரமுடியும். ஆகவே மாணவி கொலை வழக்கின் அத்தாட்சி படுத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரத்தினை யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு பணிக்கிறேன்” என நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.