மூளைச்சாவடைந்த இளைஞனின் இருதயம் அளுத்கம சிறுமிக்கு.

மூளைச்சாவடைந்த இளைஞனின் இருதயம் அளுத்கம சிறுமிக்கு பொருத்தப்பட்டது

இலங்கையில் இரண்டாவது இதயமாற்று சத்திர சிகிச்சை நேற்று (27) கண்டி பெரியாஸ்பத்திரியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

250

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சச்சினி செவ்வந்தி என்ற சிறுமிக்கு கண்டி பெரிய ஆஸ்பத்திரியின் இருதய சிகிச்சைப் பிரிவில் இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

நிபுணத்துவ மருத்துவர்கள், தாதிமார் அடங்கலாக சுகாதார பிரிவினர் நேற்று முன்தினம் (26) இரவு 8.00 மணிமுதல் நேற்று (27) காலை 5.00 மணிவரை சுமார் 9 மணி நேரம் இந்த சத்திர சிகிச்சையை நடத்தியுள்ளனர்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் முதலாவது இருதய மாற்று சத்திரசிகிச்சை நடத்தப்பட்டு 2 மாதங்களில் இரண்டாவது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய, கண்டி ஹாரகம பிரதேசத்தைச் சோந்த 28 வயது இளைஞனின் இதயமே இவ்வாறு அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.இந்த இளைஞனின் இரு சிறுநீரகங்களும் கூட தானமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன

சச்சினி செவ்வந்திக்கு ஏற்கனவே இருதய மாற்று சத்திர சிகிக்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சில தொழில் நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த சத்திர சிகிச்சை தாமதமானது

இரண்டாவது சத்திர சிகிச்சை மேற்கொள்ள உபகரணங்கள் குறைபாடாக இருப்பதாக மருத்துவர்கள் சுகாதார அமைச்சருக்கு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட அமைச்சர் திருகோணமலை மூதூர் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டிருந்த இரு உபகரணங்களை மீள கண்டி ஆஸ்பத்திரிக்கு பெற்றுக்கொடுக்குமாறு பணித்திருந்தார். அவை போதுமானதாக இல்லை என மருத்துவர்கள் அறிவித்ததையடுத்து குறித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தேவையான இயந்திரத்தை பெறுமாறு அமைச்சர் அறிவித்திருந்தார்

.இதன் பின்னர் இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மகளின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சச்சினி செவ்வந்தியின் தந்தை .மகேஷ் குமார தெரிவித்தார்.

கண்டி பெரிய ஆஸ்பத்திரியின் இருதய சிகிச்சைப் பிரிவு நிபுணத்துவ வைத்தியர், அனில் அபேவிக்ரம தலைமையிலான 22 பேர் அடங்கிய வைத்திய குழு இந்த இருதய சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

தற்பொழுது சிறுமி ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.