நிலங்களை கோரி ஆர்ப்பாட்டம் செய்த மக்களை மிரட்டிய இராணுவம் – அச்சத்தில் மக்கள்!

வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து வன ஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்க காணிகள் அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாலையில் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களை சீருடை தரித்த இராணுவத்தினர் மிரட்டியதாக குறித்த மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நிலங்களை கோரி ஆர்ப்பாட்டம் செய்த மக்களை மிரட்டிய இராணுவம் - அச்சத்தில் மக்கள்!

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சீருடை தரித்த இராணுவத்தினர் மக்களை மறித்து எதற்காக இந்த போராட்டம் என்று மிரட்டும் தொனியில் கேட்டதாக தெரிவிக்கும் மக்கள் தாம் தொடர்ந்து இந்த போராட்த்தை முன்னெடுப்பதில் அச்சமான சூழ்நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே 145 மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்றையதினம் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் தேசிய பூங்கா அமைப்பதற்காக 196 சதுர கிலோமீற்றர்கள் காணி அரச வர்த்தமானியூடாக சுவீகரிக்கப்பட்டு தற்போது எல்லையிடப்பட்டு எல்லைக்கற்களும் நடப்பட்டுகொண்டுடிருக்கின்றன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்கள், கடல் நீர் மற்றும் மீன்பிடி விவசாயம், பயிர்ச்செய்கைகள் முதலானவை பாதிக்கப்படுவதுடன் எமக்கு சொந்தமான வயல் நிலங்கள் வாழ்விடங்கள் எல்லாம் இழந்து நிர்க்கதியான நிலமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எனவே வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து எமக்கு பூர்வீக வாழ்விடங்களை விடுக்குமாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது மகஜரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தினால் குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்த மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும், தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதில் தொடர்பில் அச்சம் தோன்றியுள்ளதாகவும் தெரிpவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.