உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் வவுனியா சிங்கள கிராமங்கள் அகற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹெல பொதுசவிய என்னும் அமைப்பினால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹெல பொதுசவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர், இந்த விடயம் குறித்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வவுனியாவில் சிங்கள கிராம சேவைப் பிரிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரியளவில் சிங்கள மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நந்திமித்ரகம, செலலஹினிகம, நாமல்கம, போகஸ்வெவ1, போகஸ்வெவ2, மெஹவெரதென்ன ஆகிய கிராமங்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளாகும். எனினும், 2015ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தில் இந்த கிராம சேவகர் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இது குறித்த கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கு பெரும் அநீதியாகும். குறித்த பகுதியில் பதவியில் இருக்கும் அரச உயர் அதிகாரிகள் தமிழர்கள் என்பதனால் சிங்கள கிராமங்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளூரராட்சி மன்றத் தேர்தலின் போது சிங்கள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கவோ தேர்தலில் போட்டியிடவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வாக்குரிமை மட்டுமன்றி குறித்த பகுதிகளில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் நிவாரணங்களும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







