மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பான 17 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளன.
கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற பாரிய நிதி மோசடி, அரச வளங்கள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2015 மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட குழுவே மேற்படி அறிக்கைகளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளது.
குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் அதற்கு ஆயிரத்து 599 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. அவற்றுள் 401 முறைப்பாடுகள் மாத்திரமே ஆணைக்குழுவின் விடயதானத்துக்கு அதிகாரப்பரப்புக்கு உட்பட்டதாக அமைந்தன.
அவற்றுள் எவ்.சி.ஐ.டி., லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவை முன்னெடுக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் அவற்றுக்கு மேற்படி ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச மற்றும் கடந்த அரசின் முக்கிய சில அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ள 17 அறிக்கைகளே ஜனாதிபதியிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளன.
கொப்பேகடுவ ஆய்வு மையத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி, வடமத்திய மாகாணத்தில் கேள்விப்பத்திர விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி என 17 விசாரணை அறிக்கைகள் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. அவை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறியமுடிந்தது.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த 2ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் மூன்று மாதங்களுக்கு ஆயுட்காலத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அறியமுடிகிறது.







