உடல் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. உயிர் முழுக்க திலீபனுடன் தான் இருந்தது – ஓவியர் புகழேந்தி

உலகின் ஒரு முக்கியமான பிரச்சினைக்காக தனிநபர் ஒருவர் பல ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்துவது என்பது மிகவும் அரிதான விஷயம்.

mmm

ஆனால், உலகில் பலரின் கவனத்தைத் திசை திருப்பிய தமிழீழப் பிரச்சினைக்காக, 100 ஓவியங்களை வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

தஞ்சாவூர் மாவட்டம் தும்பதிக்கோட்டை கிராமத்தில் 1967-ம் ஆண்டு பிறந்த புகழேந்தி இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

தமிழீழத்திற்காக 100 ஓவியங்கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளான மதக் கலவரம், சாதி ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான தாக்குதல் என அனைத்து பிரச்சினைகளையும் ஓவியமாக இவர் வரைந்துள்ளார்.

இவர் வரைந்த ஓவியங்களுக்காக 1987-ம் ஆண்டு, பிரபல ஓவியர் எம்.எஃப். உசேனால் தேர்வு செய்யப்பட்டு தமிழ் தேசிய விருது மற்றும் தமிழக அரசின் மாநில விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தற்போது தனது 50 ஆண்டு கால வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் ”நானும் எனது நிறமும்” என்ற தலைப்பில் தன் வரலாற்றுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

எரியும் வண்ணம்’, ‘உறங்கா நிறங்கள்’, எம்.எஃப் உசேன் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு என பல நூல்களையும் எழுதி இருக்கிறார்.

சமூக அக்கறையுடன் கூடிய ஓவியங்கள் பற்றி புகழேந்தியுடன் ஒரு நேர்காணல்..

jkdcnd

உங்களது ஓவியங்கள் ஈழம் சார்ந்து ஈர்க்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன?

1983-ம் ஆண்டு தமிழீழப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போது பலர் உண்ணாவிரதம், மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர்.

நான் அப்போது ஓவியக் கல்லூரி மாணவனாக இருந்தேன். இந்த வன்முறையை போராட்டத்தோடு நிறுத்தாமல், ஓவியமாக வரைந்து உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன்.

என்னுடைய ஈழம் சார்ந்த 100 ஓவியங்கள் உலகின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. சமீபத்தீல் லண்டனில் மூன்று முக்கிய இடங்களில் இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஈழம் சார்ந்த ஓவியங்களில் மட்டும் தனி கவனம் செலுத்தக் காரணம் என்ன?

ஈழம் சார்ந்த ஓவியங்களை விட மற்றப் பிரச்சினைகளுக்காக நான் வரைந்த ஓவியம் அதிகம். 2008-ம் ஆண்டு வரை, ஈழ விடுதலைக்காக 27 ஓவியங்கள் மட்டுமே வரைந்தேன்.

குஜராத் பூகம்பம், மதக் கலவரம், ஜாதி, மத ரீதியான உலகளாவிய அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் ஓவியங்கள் வரைந்துள்ளேன். ஆனால், என்னை ஈழம் சார்ந்தவராக அடையாளப்படுத்தி விட்டனர்.

தமிழீழத்தில் உங்கள் ஓவியத்திற்கான வரவேற்பு என்பது எப்படி இருந்தது?

என்னுடைய பல படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. திலீபன் உள்ளிட்ட ஓவியங்களுக்கு பிரபாகரன் என்னை அழைத்து, ‘தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எப்படி ஈழம் சார்ந்து வரைந்தீர்கள்? என்று கேட்டார்.

 

அதற்குப் பதிலாக, ‘உடல் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. உயிர் முழுக்க திலீபனுடன் தான் இருந்தது’ என்றேன்.

சமூகப் பிரச்சினைகளில் ஓவியம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஓவியர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?

தமிழ்நாட்டில் ஓவியம் என்பது மிகவும் மூத்த கலையாகும். பெரும்பாலும் அன்றைய காலகட்டத்தில் ஒரு மதத்தை, அவர்களின் கலாசாரத்தை பதிவு செய்யப் பயன்பட்டது. சில ஓவியர்கள் ஓவியம் வரைதலைத் தொழிலாகச் செய்து வருகிறார்கள்.

அது ஏற்புடையதாக இருந்தாலும், மொத்தமாக வியாபார ரீதியாக செயல்படுவது என்பது சரியானது அல்ல. படைப்பாளியானவர், சமூகத்தில் இருந்து வேறுபட்டு நிற்க முடியாது.