இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் நளினி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தான் ஜீவசமாதி அமைவதற்கு அனுமதி கோரி இன்று 12 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் முருகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நளினி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு முருகன் தொடர்ந்தும் மறுப்பதாகவும் அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.







