இன்று பதவி விலகுவார் நீதி அமைச்சர் ?

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

wijedasa-rajapaksa

அமைச்சர் பதவியில் இருந்து விலக தாம் விரும்புவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருக்கிறார் என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, தலதா அத்துகோரள புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அவர் அந்தச் செய்திகளை நிராகரித்துள்ளார். நீதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் தம்மிடம் கேட்கவில்லை என்று தலதாஅத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நீதி அமைச்சராக ஜயம்பதி விக்கிரமரத்னவை நியமிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுததியிருப்பதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.