கூகுள் உதவியுடன் நாடு திரும்பிய வியட்னாம் பெண்!

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் ஒத்தாசை கொண்டு குடிவரவு அதிகாரிகளின் மனிதாபிமான உதவிகளைப் பெற்று வியட்னாமியப் பெண்ணொருவர் தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

viyadnam

கட்டுநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அலுவலகத்துக்கு இன்று காலை வருகை தந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கண்ணீருடன் ஏதோ சொல்ல முயன்ற போதும் அங்கிருந்த யாருக்கும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

குறித்த பெண்ணுக்கும் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியும் அறவே புரிந்து கொள்ள முடியாத நிலையில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளும் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அவரிடமிருந்த கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் குறித்த பெண் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவர் என்று உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எனினும் வியட்னாம் மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர் எவரையும் தேடிக் கொள்ள முடியாத நிலையில் இருதரப்பினரும் சைகை மொழி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு ஒருவருக்கொருவர் உரையாட முயன்று தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த அதிகாரியொருவர் வியட்னாமியப் பெண்ணின் கையில் ஸ்மார்ட் போன் இருப்பதை அவதானித்தவுடன் சட்டென்று வித்தியாசமான உத்தியொன்றைக் கையாண்டுள்ளார்.

தனது கையில் இருந்த ஸ்மார்ட் போனைக் கொண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட்டரை செயற்படுத்தி குறித்த பெண்ணிடம் அவரது பிரச்சினையைக் கூறுமாறு ஆங்கிலத்தில் டைப் செய்து வியட்னாமிய மொழிக்கு மொழிபெயா்த்துக் காட்டியுள்ளார்.

இதனைப் புரிந்து கொண்ட வியட்னாமியப் பெண்ணும் தன் கையில் இருந்த ஸ்மார்ட் போன் உதவியுடன் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரை செயற்படுத்தி வியட்னாமிய சொற்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அதிகாரிகளுக்கு தனது பிரச்சினையை தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களாக எதுவித ஆகாரமும் இன்றி வெறும் தண்ணீரை மாத்திரம் அருந்தி உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் உடனடியாக தான் நாடு திரும்பிச் செல்ல உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனையடுத்து அப்பெண்ணுக்கு உணவு வரவழைத்துக் கொடுத்த அதிகாரிகள் விமான நிறுவனங்களுடன் பேசி அதற்கடுத்த விமானத்தில் அவர் நாடு திரும்பவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

கடைசியாக குறித்த வியட்னாமியப் பெண் தனது போனில் இருந்து கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் குடிவரவு அதிகாரிகளுக்கு கீழ்க்கண்டவாறு நன்றி தெரிவித்திருந்தார்.

“Thank you. Finally god led me to the humans.” உங்களுக்கு மிக்க நன்றி. கடவுள் கடைசியாக என்னை மனிதர்களிடம் அனுப்பி வைத்துள்ளார் என்று அந்தச் செய்தியில் காணப்பட்டது.