ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் 2018 ஆம் ஆண்டு வருகை தரவுள்ள புதிய நோர்வேஜிய ஆராய்ச்சி கப்பலான பிரிட்டோவ் நன்சன் ஸ்ரீலங்காவின் கடல்வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் நோர்வே மீன்பிடித்துறை அமைச்சுக்களுக்கிடையிலான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பின் பகுதியாக நடைபெறும் இந்த செயற்பாட்டுக்கான அங்கீகாரம் இருநாடுகளினதும் உயர் அரசியல் தலைமைகளிடமிருந்து கிடைத்துள்ளது.
கடல் வளங்களின் தற்போதைய நிலை, மீன்வளத்தின் இருப்பு, கண்ட மேடைகள் மற்றும் சாய்வுகளில் பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் மீன்வளங்களை விசாரணை செய்தல் இந்த மதிப்பீட்டின் நோக்கங்களாகும்.
ஸ்ரீலங்காவின் இவ்வாறான இருப்பு மதிப்பீடு 1978 ஆம் ஆண்டு முதல் 1980 வரையான காலப்பகுதியில் இதற்கு முந்தைய பிரிட்டோவ் நன்சன் ஆராய்ச்சிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்டது.
அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே செயலாண்மைக்குச் சொந்தமான இந்தப் புதிய கடலாராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீன்பிடி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு உதவும் நோக்கில் நோர்வே கடலாராய்ச்சி நிறுவனம் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து செயற்படுகின்றது.
புதிய ஆராய்ச்சிக் கப்பலானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உயிர்ப்பல்வகைமையை மையப்படுத்திய கடல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான நோர்வேயின் உதவித்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதை வாய்ப்பாக்கும் என்றும்,
வங்காள விரிகுடாவிற்குள் இந்த கப்பலின் வருகையை திட்டமிட்டு இற்றைப்படுத்தும் நிகழ்வை அங்கீகரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த தெரிவித்தார்.