முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகன் யோசித்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவாக பஸ்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
ஊடக கண்காட்சி ஒன்றை நடத்துவதற்காகவே இவ்வாறு மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஷிரந்தி ராஜபக்ச நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது அவருக்கு ஆதரவாக பெருந்திரளான மக்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “ஆதரவாளர்களை அழைத்து வந்த பஸ்கள்“ அரச ஔடத கூட்டுத்தாபனத்திற்கு அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மகிந்த திருடன் என அங்கிருந்த ஒருவர் கூச்சலிட்ட போது, ஒன்று கூடியிருந்த ஆதரவாளர்கள் அவரை அடித்து விரட்டினார்கள்.
பெருமளவான பணத்தை செலவிட்டே மகிந்த அணியினர் இவ்வாறான ஊடக கண்காட்சியை நடத்துகின்றனர். எவ்வாறாயினும், குற்றப் புலனாய்பு பிரிவுக்கு விசாரணைகளுக்காக செல்பவர்கள் விஹாரமகா தேவியாகி விடுகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.







