மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவர் உட்பட அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆட்சியின் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடி விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு அவசர பணிப்புரை விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

lanka-rdv-tmagarticle

நல்லாட்சி அரசு அமையப் பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை முன்னாள் அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஒன்றேனும் முற்றுப்பெறவில்லை.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுத்த கடும் அழுத்தத்தின் பேரில் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரை அரசால் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

அரசிலுள்ள சிலரின் நடவடிக்கைகளால் ராஜபக்ச அரசின் காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் பொதுச் சொத்து இழப்புகள் குறித்து மக்களுக்குத் தெரியாமல் போகக்கூடும்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அது பாரதூரமான விடயமாக மாறி விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களால் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டதாலேயே இந்த விசாரணைகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.