வெடிபொருட்களை அகற்றுவதில் சவால் நிறைந்த பிரதேசமாக முகமாலைப் பகுதி

கிளிநொச்சி – முகமாலைப்பகுதியில் தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பிரதேசம் மிகவும் சவால் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

m1

கிளிநொச்சி – முகமாலைப்பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, வெடிபொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியானது ஆபத்து, சவால் நிறைந்து காணப்படுகின்றது என கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இத்தாவில், முகமாலை, வேம்பொடுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முகமாலைப்பகுதியில் மிகவும் ஆபத்தான முறையில் வகைதொகையின்றி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதுடன், நீண்டகாலம் காத்திருந்து உயிர் பறிக்கக்கூடிய நிலை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன், பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் என்பவற்றில் அதிகளவான வெடிபொருள் காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமென பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராலும், கண்ணிவெடி விழிப்புணர்வு செயற்பாடு செயலகத்தாலும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

நன்கு பயிற்சி பெற்று நீண்ட காலம் பணிகளில் ஈடுபட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் அணியினருக்கே இந்த பகுதி மிகவும் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுவதாக இப்பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

m2 m3 m4 m5