மனைவியை கொன்று உடலை புதைத்த கணவன் உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை கொன்று உடலை புதைத்து விட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய கோழிக்கடைக்காரரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஓட்டப்பிடாரம்,
Woman-killed

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த எட்வின் ஜான்- ராஜம்மாள் ஆகியோரின் 3-வது மகள் நிர்மலா (வயது 30). இவருக்கும், தூத்துக்குடி மமவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கல்லத்திகிணற்றைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் செல்வக்குமார் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

செல்வக்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் வசித்து வந்தார். அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்தார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 8-7-2017 அன்று நிர்மலா உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், உடலை கல்லத்திகிணற்றுக்கு கொண்டு சென்று விட்டதாகவும் செல்வக்குமார், நிர்மலாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையில் கல்லத்திகிணற்றில் உள்ள மயானத்தில் நிர்மலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மனைவி இறந்து சில நாட்களில் செல்வக்குமாரின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிர்மலாவின் தாயார் ராஜம்மாள், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தன்னுடைய மகளை செல்வக்குமார் அடித்துக்கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகோபால் நேரடி மேற்பார்வையில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், செல்வக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் சரியான பதிலை கூறவில்லை. இதையடுத்து புதைக்கப்பட்ட நிர்மலாவின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கல்லத்திகிணற்றில் நிர்மலா உடல் புதைக்கப்பட்ட இடத்தை செல்வக்குமாரின் உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.

பின்னர் தாசில்தார் நம்பிராயன், மண்டல துணை தாசில்தார் இசக்கிமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் (முன்னீர்பள்ளம்), ராஜேசுவரி (கடம்பூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பாண்டி, சீதாலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் நிர்மலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த நிர்மலாவின் உடலை சம்பவ இடத்திலேயே தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் நிர்மலா உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.

நிர்மலா உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உடலில் காயங்கள் இருந்ததாகவும், எனவே நிர்மலா அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து செல்வக்குமாரிடம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது, மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக உறவினர்களிடம் செல்வக்குமார் நாடகமாடியது அம்பலமானது. ஆனால் நிர்மலா கொலை செய்யப்பட்டதற் கான காரணமும், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட காரணமும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.