பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக எந்த நேரத்திலும் தான் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

download (19)

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் என்னையும் விசாரணை செய்ய வேண்டுமென்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமூகமளித்து இது தொடர்பாக சாட்சியமளிக்க நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

அவ்வாறு சாட்சியமளிக்கும்போது பிணைமுறி மோசடி காரணமாக உண்மையில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை புள்ளிவிபரங்களுடன் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிணைமுறி மோசடி தொடர்பாக நடைபெற்ற திரைமறைவு சதிகள், பின்னணிகள் என்பன குறித்தும் ஆணைக்குழுவின் கவனத்துக்குச் சில விடயங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை எனது சகோதரி ஷிரோமி விக்கிரமசிங்க என்பவர் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் செயற்பட்டிருந்தது குறித்தும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, அவர் நிறுவனத்தின் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களிலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்றும் நிவாட் கப்ரால் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.