எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தும்போது போலியான அடையாள அட்டை, தகவல் குளறுபடிகள் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு தேவைகளின் போது அடையாள அட்டையில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக அப்பாவிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றிருந்தன.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் அடையாள அட்டையை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போதைக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்குவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டில் வரவுள்ளது.
முதற்கட்டமாக முதல் தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் காணாமல் போன அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
பின்னர் 2018ஆம் ஆண்டளவில் விரல் ரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அதன் பின்னர் தற்போதைக்கு அடையாள அட்டை வைத்துள்ள 16 மில்லியன் இலங்கையர்களுக்கும் கிராம சேவையாளர்கள் ஊடாக புதிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.







