அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குஹாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ள போவதாக வடகொரிய கடந்த 10 ஆம் திகதி அறிவித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகிறது.
குஹாம் தீவிற்கு ஏதேனும் நடந்தால் பாரிய அனர்த்தத்தை எதிர்பார்க்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ட் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் தனது அணுவாயுத திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக வடகொரியாவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளது.
அதேவேளை வடகொரியாவின் அயல் நாடான தென் கொரியாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அவசர நிலைமை ஏற்பட்டால், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களை துரிதமாக அப்புறப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவுக்கான இலங்கையின் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் அதிகளவில் தொழில் புரியும் பிரதேசங்களை ஆராய்ந்து 6 மாதங்களுக்கு முன்னர் இந்த திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுத்ததாக தென் கொரியாவுக்கான இலங்கையின் தூதுவர் மனீஷா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான அறிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.







