கணவனுக்காக கஞ்சா வளர்த்த மனைவி கைது

கணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோன்வெவ வீதியில் வசித்து வரும் விவசாயப் பெண் ஒருவர் கணவனுக்காக கஞ்சா வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண்ணை கஞ்சா செடியோடு கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டின் பின் புறத்திலுள்ள நீரோடைக்கருகில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். அக் கஞ்சா செடியானது 7 அடி உயரம் 7 அடி அகலமுடையது என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் கஞ்சா சுருட்டுக்கு அடிமையானவர் என்றும் இரண்டு தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒரு கிலோ கிராம் நிறையுடையது என்றும் அது காய்ந்த பின்னர் அதன் நிறை சுமார் 250 கிராம் இருக்கும் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவரை அனுராதபுர நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.