வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் அறிவுறுத்தல்

வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

NPC-02-11-15_40

இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப்பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகின்றது.

தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப்பினர் இருக்கின்றார் எனச் சந்தேகிப்பதன் காரணத்தாலேயே அந்த நபருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது என அந்த அறிவுறுத்தலின் போது விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

அயல்நாட்டின் கொழும்புத் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். யாழ். நகரிலுள்ள விடுதியில் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்துப் பேசுவதற்கு விரும்பியுள்ளார். இருப்பினும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்தச் சந்திப்பிலேயே அமைச்சர் நியமனம் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.