மலேசியா வாழ் இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல் !

MALE

மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்ற இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இலங்கையர்கள் தங்களை பதிவுசெய்து கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவின் உள்துறை அமைச்சு இந்த தகவலை அறிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் 5,964 இலங்கையர்கள் சட்டரீதியாக தொழில்புரிந்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மேலும் ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் முறையாக பதிவுசெய்யாத தொழிலாளர்கள் அவர்களை பதிவு செய்து கொள்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 30ஆம் திகதியோடு நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், மலேசியா குடிவரவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தொழில் செய்த 5,065 வெளிநாட்டவர்க் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 5,065 தொழிலாளர்களில் 1,520 பங்களாதேஷிகள், 1,476 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 429 பேர், வியட்னாமைச் சேர்ந்த 285 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 206 பேர், பிலிப்பைன்சைச் சேர்ந்த 261 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றவர்கள் தங்களை சட்டரீதியான பணியாளர்களாக பதிவு செய்துக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலஅவகாசம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் இலங்கையர்கள் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.