அமைச்சர் விஜயகலாவை விசாரணைக்கு உட்படுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!! -(வீடியோ)

வித்தியா படுகொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை பொதுமக்கள் மின்கம்பமொன்றில் கட்டி வைத்திருந்த போது, சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்காது விடுவித்த சம்பவம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சுவிஸ் குமாரை ஊர் மக்கள் பிடித்து மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்திருந்த போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அந்த இடத்திற்கு வந்து சுவிஸ் குமாரை மீட்டுச் சென்றதாகவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தவில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான கணொளி ஒன்றையும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீதான குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்துமாறும் வாக்கு மூலமொன்றை பதிவு செய்யுமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி தமிழ்மாறன் சந்தேக நபர் தொடர்பிலான தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்