வட கொரிய அணு உலை மீண்டும் செயல்பட நடவடிக்கை

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

அந்த நாடு அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருவதாக சமீபத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து, உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்தநிலையில் அங்கு யோங்பியான் நகரில் உள்ள அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையில் வட கொரியா இறங்கி உள்ளது.

இதை வணிக ரீதியிலான செயற்கைக்கோள் ஒன்றின் படம் அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த உலை, அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளுட்டோனியம் உற்பத்திக்கு பெயர் பெற்றது. எனவே வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்ற புளுட்டோனியம் தயாரிப்பில் கவனம் செலுத்தப்போகிறது என்று யூகிக்கப்படுகிறது.

இதுபற்றி வாஷிங்டனின் ‘38 வடகொரியா கண்காணிப்பு திட்ட குழு’ கூறும்போது, “ஜனவரி 22 தேதியன்று கிடைத்துள்ள செயற்கைக்கோள் படங்கள், யோங்பியான் அணு உலை செயல்படப்போவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன” என்றது.

இந்த அணு உலையின் செயல்பாடுகள் 2015-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

மீண்டும் இப்போது இந்த அணு உலை செயல்படப்போவதாக தெரியவந்திருப்பது அண்டை நாடான தென்கொரியாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்கா தடுப்புச்சுவர் எழுப்ப ஈரான் எதிர்ப்பு

மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்க, அந்த நாட்டின் எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதற்கான பணத்தை தர முடியாது என மெக்சிகோ கூறி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு எடுத்திருப்பது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டெக்ரானில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை அவர்கள் (டிரம்ப்) மறந்து போனார்கள் போலும். நாடுகளுக்கு இடையே சுவர்கள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நேரம் இது அல்ல” என குறிப்பிட்டார்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பது பற்றி ஹசன் ரவ்ஹானி நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், “உலக நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்ட காலம் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் கதவுகளை திறந்து வைத்துள்ளது” என குறிப்பிட்டார்.

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை

அமெரிக்க ஜனாதிபதியாக ச்மீபத்தில் பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார்.
உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்த அதிபர் டிரம்ப்,  ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான
‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது.
டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்க மக்கள், உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டொனால்டு டிரம்ப் தடை விதித்த 7 நாட்களில் இருந்து முறையாக விசா பெற்று அமெரிக்காவிற்கு பிரவேசிக்க இருந்த பயணிகளையும் பெரிதும் பாதித்தது. இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் உத்தரவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். மேற்கு கூறிய நாடுகளில் இருந்து வந்த பயணிகள் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இவ்வாறு சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.
டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பான விவகாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அன் டொனேலே டொனால்டு டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து அமெரிக்காவில் பயணிகள் தரையிறங்க அனுமதி கிடைத்து உள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளை வெளியேற்றும் பணியை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மீண்டும் தனுஷுடன் இணைவேன்: அனிருத்

தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.

இடையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த  படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர். தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே தனுஷ் வேறொரு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒரு இசையமைப்பாளர் ஒரே நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தால், ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடும். அதை தவிர்ப்பதற்காகவே நானும், தனுஷும் சின்ன இடைவெளி ஏற்படுத்திக் கொண்டோம். மீண்டும் நாங்கள் இணைந்து பணிபுரிவோம் என்றார்.

தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை

இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது, ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார்னிசேனா என்ற அமைப்பை சேர்ந்த சிலர் இப்படத்தின் படப்பிடிப்பில் புகுந்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கூறும்போது, சஞ்சய் லீலா பன்சாலி, 1300-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணியான பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருவதாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லீம் மன்னர் ஒருவரை மணந்துகொண்டதாகவும் அதையே பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல பாலிவுட் டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள்.

கடுப்பான காவ்யா மாதவன் போலீசில் புகார்

காவ்யா மாதவன் பற்றி முன்பு வித விதமான விமர்சனங்கள் வந்தன. திலீப்பை காவ்யா மாதவன் திருமணம் செய்து  கொண்டார். இனி அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தார்.

சினிமாவில் இருந்தும் ஒதுங்கி விட்டார். என்றாலும், இணைய தளங்களில் காவ்யா மாதவன் பற்றி மோசமான விமர்சனங்கள்  வெளியாகி வருகின்றன. இதனால் ஆவேசமான அவர் எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.யை சந்தித்து தன்னை விமர்சனம்  செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி  வருகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் காவ்யா மாதவன் உறுதியாக  இருக்கிறார்.

தல 57 படத்தின் தலைப்பு இதுவா? குழப்பத்தில் ரசிகர்கள்

அஜித் தற்போது நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், அப்படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவராக புதுபுது வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய ஆங்கிலத்தில் V வரும்படியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால், அஜித் நடிக்கும் இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்புதான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது.

இதையடுத்து, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதில், ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் தங்களின் பரிசீலனையில் முதல் இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்படத்தின் தலைப்பு குறித்த வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது.

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் கேத்ரீன் தெரசா

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது புதுமுக இயக்குனர் அர்ஜுன் சொன்ன நகைச்சுவையான கதை பிடித்துப்போக அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அர்ஜுன் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் கதாநாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு ‘யங் மங் சங்’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க!

கரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும்.

வெண்புள்ளிகளானது சருமத்துளைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் அடைப்பு ஏற்படுவதால் வரும். வெண்புள்ளிகளை நீக்குவது என்பது சற்று கடினமானது. இங்கு அந்த அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் கொண்டு பேஸ்ட் செய்து, வெண்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின் தவறாமல் டோனரைப் பயன்படுத்துங்கள்.

ஆவிப்பிடிப்பது
ஆவிபிடிப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். அதற்கு ஆவி பிடித்த பின், சுத்தமான துணியால் சருமத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.

சர்க்கரை
சர்க்கரையை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவை முழுமையாக வெளியேறும்.

ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சி அடையாமல் மென்மையாக இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் சரிசம அளவில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

பட்டை
பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெண்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் போக்கும்.

கடலை மாவு
கடலை மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்குவதோடு, வெண்புள்ளிகளும் உருவாகாமல் இருக்கும்.

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து!

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.

வால்மிளகு – 10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங்கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.

புற்று நோய்க்கும் இந்த 9 விஷயங்களுக்கும் என்ன தொடர்பு?

பல வருடங்கள் வளர்ந்த ஒரு பெரிய மரத்தில்கூட, ஒரு நோய் ஏற்பட்டால் அது அந்த மரத்தின் கொப்பு கொப்பாக எல்லா இலைகளுக்கும் பரவி, மொத்த மரத்தையும் அழிக்கும் பலம் கொண்டது.

அது குறித்து அறிந்துகொண்ட நம் முன்னோர், நோய் ஏற்பட்ட பகுதியை மரத்திலிருந்து வெட்டி நீக்கினர். புற்றுநோயும் இதனை ஒத்ததுதான். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

அல்லது, புற்றுநோய் பரவியுள்ள பகுதியை உடலிலிருந்து நீக்கி, குணப்படுத்தலாம். ஆனால், எல்லா புற்றுநோய்களையும் அவ்வாறு குணப்படுத்த முடியாது.

நமக்கோ, நமது உறவினருக்கோ அல்லது அயலவருக்கோ புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்போது, வாழ்கை குறித்த எதிர்பார்ப்புக்களை துறந்து விட்டு, என்ன செய்ய வேண்டும்?, எங்கே போக வேண்டும்? என்று புரிந்துகொள்ள முடியாது போகின்றது.

உண்மையில், அப்படியான சந்தர்ப்பத்தில் நாம் ஆதரவற்றவர்களாகிப்போகிறோமல்லவா? என்னைப் போன்றே, இக்கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் சிலபோது இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இன்று இந்தக் கட்டுரை மூலம், புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்கள் குறித்தே, நாம் விளக்கவுள்ளோம்.

முன்பெல்லாம் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டால், அடுத்து அவர் மரணம் குறித்தே எண்ணுவார். ஆனால், இப்போது நிலை மாறியுள்ளது.

ஏனெனில், தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக, புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், பெரும்பாலும் மருத்துவ உதவியுடன் அதனைக் குணப்படுத்தலாம். புற்றுநோய் உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

புகையிலை, மது, இரசாயனப் பொருட்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், தொழிலின்போது புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு முகம்கொடுத்தல், மரபியல் காரணிகள், சூழலியல் காரணிகள், ஹோமோன்களின் செயற்பாடு, பல்வேறு மருந்துகளை பயன்படுத்தல், ஒட்டுண்ணி மற்றும் சிறு விலங்குகளின் செயற்பாடுகள், வேறு நோய்களின் பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகள், அதிகளவு உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல், முதுமையடைதல் போன்ற காரணிகள் அவற்றில் சிலவையாகும்.

புகையிலை மற்றும் மது பயன்படுத்தல்

நடத்தை மற்றும் சமூகக் காரணிகளே புற்றுநோயை உருவாக்கும் பிரதான காரணிகளாக உள்ளன. மது அருந்துதல் இவற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றது.

சிகரட்டில் புற்றுநோயை உருவாக்கும் விடயங்கள் 40 க்கும் மேல் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீரா? சிகரட்டில் உள்ள மிகவும் அபாயகரமான இரசாசயனப் பொருள் ‘டார்’ (Tar) என்பதாகும்.

புகை பிடிப்போர் இரண்டு வகைப்படுகின்றனர். முதலாவது வகையினர் உண்மையாகவே புகைப்பிடிப்போர். இரண்டாவது வகையினர், புகைபிடிப்போருக்கு அருகாமையில் இருப்பதனால், புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை உடலுக்குள் உள்வாங்குபவர்.

உண்மையிலேயே புகைப்பிடிப்போரை விடவும், புகைப்பிடிப்போருக்கு அருகாமையில் இருப்பவர்க்கு, புற்று நோயை உருவாக்கும் காரணிகள் உடலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு 50 மடங்கு அதிகமாக உள்ளமை பலருக்கும் தெரியாது.

புகைப்பிடிப்போருக்கு மத்தியில் சுவாசப்பை புற்றுநோய் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். அவ்வாறே, தொண்டை பகுதியில் ஏற்படும் புற்றுநோய், கணையத்தில் ஏற்படும் புற்றுநோய், சிறுநீரகம், சிறுநீர்பை, கர்ப்பப்பை பகுதிகளிலும் புற்றுநோய் எற்படுவதற்கான வாய்ப்பும் புகைப்பிடிப்போருக்கு இருக்கின்றது.

புகைப்பிடிப்பது தவிர, மது அருந்துவோருக்கும் இவ்வாறான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.

வெற்றிலை மெல்லுவதன் மூலமாக வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படுகின்ற பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருக்கின்றன.

இது குறித்து இலங்கையர்கள் ஆகிய நாம் அதிக கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

இரசயானப் பொருட்களின் பயன்பாடு

பல்வேறு இரசாயனப் பொருட்கள் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படுவதாக விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, எஸ்பஸ்டோல் (Asbestos) மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு இடையில் உள்ள தொடர்பை குறிப்பிடலாம்.

எஸ்பஸ்டோஸிலிருந்து விழும் துகள்கள் சுவாச வழி ஊடாக உடலுக்குள் செல்வதனால் நுரையீரல் புற்றுநோய் உருவாகின்றது.

அத்தோடு, சில பூச்சிகொல்லிகளில் உள்ள ஆசனிக் (Arsenic) எனப்படும் இரசாயனப் பதார்த்தம் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோயை உருவாக்குவதோடு, இறப்பர் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பென்சீன் (Benzene) எனப்படும் இரசாயனப் பதார்த்தம் லியுகீமியாவை உருவாக்கும்.

உணவுப் பழக்கவழக்கம்

உணவுக்கும் பல்வேறு நோய்களுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன என்று கூறப்படுவது குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். புற்றுநோய் உருவாவதற்கும் சில உணவுகள் காரணமாக அமைகின்றன.

அதிக எண்ணெய் கொண்ட உணவுகளையும், மிருக கொழுப்பு பெருமளவு அடங்கிய உணவுகளையும் உட்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயும், பெருங்குடல் புற்றுநோயும் உருவாகின்றன.

உணவுகளை நீண்ட காலம் பாதுகாப்பதற்கும், நிறமூட்டுவதற்கும், சுவையூட்டுவதற்கும் பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு உணவுகளின் மேல் வளர்கின்ற நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்கின்ற நச்சுக்கள் மூலமாகவும் புற்றுநோய் உருவாகின்றது.

அத்தோடு, பல்வேறு போசனைகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் புற்றுநோய் உருவாகின்றது.

உதாரணமாக, விட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஒக்ஸிஜனேற்ற விட்டமின் வகைகளும், ஸின்க் (Zinc), செலினியம் (Selenium) போன்ற கனிமங்களையும் குறிப்பிடலாம்.

தொழிலிலின்போது, புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு முகம்கொடுத்தல்

சில தொழில்களில் ஈடுபடுவோருக்கு புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழில்களில் ஈடுபடும்போது புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு உடல் திறந்து கொடுக்கப்படுவதனாலேயே புற்றுநோய் உருவாகின்றது. உதாரணமாக, தொழிற்சாலை தொழில்கள், பெட்ரோலிய உற்பத்திகள், சாயங்களுடன் (Dye) தொடர்பான தொழில்கள், இறப்பர், தோல், வாயுக்களுடன் தொடர்பான தொழில்களைக் குறிப்பிடலாம்.

நீண்டகாலமாக உடல் கதிர்த் தாக்கத்திற்கு உட்படுவதனாலேயே இவ்வாறு புற்றுநோய் ஏற்படுகின்றது. இதன் மூலம் உடலிலுள்ள DNA க்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் உருவாகின்றது.

மரபியல் காரணிகள்

உறவினருக்கு புற்றுநோய் இருந்தால், அது தலைமறை தலைமுறையாக கடத்தப்படும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனாலும் அதிகமான புற்றுநோய்கள் தொடர்பில் இது உண்மையான நிலையல்ல.

ஏனெனில், அதிகமான புற்றுநோய் வகைகள் பரம்பரை நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆனால், சில வகை புற்றுநோய்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் என்பவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தல்

ஸ்டரொயிட் (Steroids) வகையைச் சேர்ந்த சில மருந்துகளை பயன்படுத்தினால், புற்றுநோய் உருவாகலாம். ஆனால், அது அரிதாகவே நடைபெறுகின்றது. சில அவயவங்களை இணைத்ததன் பின்னர், நோயாளிகள் நீண்டகாலம் பயன்படுத்துவதற்கு ஸ்டரொயிட் மருந்துகள் வழங்கப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதால், அவர்களுக்கு பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படலாம்.

சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக வழங்கப்படுகின்ற புற்றுநோய் கொல்லிகளாலும், புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் கதிர் சிகிச்சை மூலமாகவும், வேறு வகை புற்றுநோய்கள் அரிதாக ஏற்படுகின்றன.

ஒட்டுண்ணி மற்றும் சிறிய விலங்குகளின் செயற்பாடுகள்

பற்றீரியா, வைரஸ் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகளால் மனிதனில் புற்றுநோயை உருவாக்க முடியும். ஹெபடைடிஸ் (Hepatitis) B மற்றும் C ஆகியனவே கல்லீரல் புற்றுநோயை உருவாக்குகின்றன.

எப்ஸ்டைன் பார் (Epstein Bar) எனப்படும் வைரஸ் மூலம் லிம்ஃபோமா (Lymphoma) மற்றும் மூக்குக்கு பின்னால் உள்ள பகுதிகளில் புற்றுநோய் உருவாகுவதாக கண்டயறிப்பட்டுள்ளது.

மனித பெபிலோமா வைரஸ் (Human Papilloma Virus) பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய், ஆணுறுப்பு புற்றுநோய் மற்றும் பாலியல் உறுப்பு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களை உருவாக்குகின்றன. அத்தோடு, சிஸ்டஸொமைசீஸ் (Schistosomiasis) எனப்படும் ஒட்டுண்ணி சிறுநீர் பகுதி புற்றுநோயை உருவாக்குகின்றது

வேறு நோய்களின் பின்னர் உருவாகும் பக்க விளைவுகள்

வேறு நோய்கள் ஏற்பட்டதன் பின்னர் உருவாகின்ற பக்க விளைவுகளாலும் புற்றுநோய் ஏற்படுகின்றது.

கர்ப்பப்பை வாய் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் புற்றுநோயாக மாற முடியும். இனப்பெருக்க உறுப்பு மருக்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற மனித பெபிலோமா எனப்படும் வைரஸ் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாவதற்கான காரணமாக அமைவதாகவும் கண்டயறியப்பட்டுள்ளது.

சிறுநீர் பகுதியில் உருவாகும் கல் நீண்ட காலம் நிலைப்பதன் மூலம் சிறுநீர் பகுதியில் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அத்தோடு, உடைந்த பற்கள் மற்றும் முறையாக பொருத்தப்படாத செயற்கைப் பற்களினால், வாயின் சளிச்சுரப்பி பகுதி மற்றும் நாக்கு என்பன அடிக்கடி எரிச்சலுக்கு உட்படுவதனால், வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் உருவாக முடியும்.

இலங்கையில் பலருக்கும் கேஸ்ட்ரைடிஸ் நோய் உள்ளது. நாம் இந்த கேஸ்ட்ரைடிஸ் குறித்து அதிகம் சிந்திக்காதபோதும், கேஸ்ட்ரைடிஸ் காரணமாக உருவாகக்கூடிய வயிற்றுப் புண் நீண்ட காலம் நிலைப்பதால் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல்

உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல் ஆகியனவற்றால், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், தைரொயிட் சுரப்பி புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என்பன உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இன்று பலரும் ஒரே வகையான வாழ்வமைப்புக்கு பழக்கப்பட்டுள்ளனர். ஆனால். இந்த ஒரே வகையான வாழ்வமைப்பிலிருந்து விலகி, சுறுசுறுப்பான வாழ்வமைப்புக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், நமக்கு புற்றுறோயிலிருந்து மட்டுமன்றி, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெற முடியும்.

இப்போது முன்பை விடவும் புற்றுநோய்க்கு உட்படுவோர் தொகை அதிகரித்துள்ளது. பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற வேறுபாடு புற்றுநோய்க்கு இல்லை. எந்த வயதைச் சேர்ந்த எந்த மட்டத்திலுள்ளோருக்கும், எந்த நேரத்திலும் புற்றுநோய் உருவாக முடியும்.

எனவே, புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்களிலிருந்து முடியுமானளவு தூரமாகி இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போது, இந்த உலகிலிருந்தே புற்றுநோயை துடைத்தெறியலாம்.

மூக்கில் உள்ள முடியை தினமும் அகற்றுபவரா நீங்கள்? ஆபத்து உங்களுக்கு தான்!

ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக  இருக்கின்றது.

அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம்.

சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது.

அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக்டீரியா தாக்கம் உண்டாகாமல் தடுத்து உதவுகிறதாம்.

மூக்கில் முடி வளர்வது அசிங்கமாக, அசௌகரியமாக இருக்கலாம். ஆனால், அதற்காக தினமும், மூக்கில் உள்ள முடிகளை அகற்றுவது சரியான தீர்வல்ல. உண்மையில் இது ஆரோக்கியமற்ற செயல்.

மூக்கு பகுதி ட்ரையாங்கில் ஆப் டெத் என்றும் கூறப்படுகிறது. மூக்கு நம் உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மூக்கில் அல்லது மூக்கு வாயிலாக உடலுக்குள் ஏற்படும் தொற்று பெரும் அபாயத்தை உண்டாக்கலாம்.

மூக்கில் இருக்கும் முடிகளை நீங்கள் சீராக தினமும் அகற்றுவதால் நோய்க்கிருமிகள் எளிதாக மூக்கின் வாயிலாக உடலுக்குள் எளிதாக சென்றுவிடுகிறது.

மூக்கில் வளரும் முடியை ஆங்கிலதில் ‘Cilia’ என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு நாளும் மூக்கினை பாக்டீரியாக்கள் தாக்கம் உண்டாகாமல் காக்க உதவுகிறது.

ஆரோக்கியம் ஒருபுறம் இருக்க, அசௌகரியம் ஒரு புறம் இருக்க, இதற்கு என்ன தான் தீர்வு?

தினமும் மூக்கின் முடியை முழுவதுமாக அகற்றுவது,தினமும் ட்ரிம் செய்வது அல்லது வேக்ஸிங் செய்வதற்கு பதிலாக, சிறிய கால இடைவேளை விட்டு, சிறிதளவில் ட்ரிம் செய்துக் கொள்வது நல்லது, முழுவதுமாக மூக்கின் முடியை அகற்ற வேண்டாம்.

மனிதனின் உயிரை குடிக்கும் முட்டை: அதிர்ச்சி தகவல்!

ஊட்டச்சத்துக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழி முட்டையை அதிக அளவில் விரும்பி உண்ணும் வேளையில் தற்போது கோழி முட்டையிலும் போலிகள் உருவாகி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன முட்டை என்ற பெயரில் மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் இந்த போலி முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன.

தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ள சீன போலி முட்டைகளின் வெள்ளை கருவிற்கு பதிலாக ஸ்டார்ச், ரெசின், சோடியம், ஆல்கனேட் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், ஜெலட்டின், கால்சியம் குளோரைடு, பென்சாயிக் அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

முட்டையின் நிறத்தினை பெறுவதற்காக செயற்கை நிறங்கள் பூசப்படுகின்றன.

மேலும், முட்டையின் ஓட்டு பகுதி இதற்காக வடிவமைக்கப்பட்ட அச்சுகள் மூலம் தயாரிக்கப்பட்டு அதன் மீது இயற்கையாக தெரிய வேண்டும் என்பதற்காக கோழியின் கழிவுகளை பூசி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சாதாரண முட்டையை விட போலி முட்டை பளபளப்பாக இருக்கும். போலி முட்டைகளை உடைத்து பல நாட்கள் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாது. மேலும், முட்டையை உடைக்கும்போது மஞ்சள் கரு உடையாமல் சிந்தாமல் சிதறாமல் வெளிவரும்.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருக்கிறது.

ஆப் பாயில் போடும் போது போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுவதாக நிமிர்ந்து நிற்கிறது. மேலும் வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுகிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.

வீட்டில் செல்வம் கொழிக்க இந்த செடியை வளருங்கள்! தென் கிழக்கு திசை முக்கியம்!

மணி பிளான்ட்டை செடியை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும்.

மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசையில் தான் அதிகம் நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை தேர்வு செய்யும்: ஜோர்டான் நம்பிக்கை

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 147 ரன்கள் சேர்த்தது. இதில் ஜோர்டான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து லோகேஷ் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். டெத் ஓவர் என்று அழைக்கப்படும் கடைசி ஐந்து ஓவரில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்.

இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். தற்போது அவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. இதனால் புதிதாக ஏலத்தில் விட இருக்கிறார். 2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது.

இதில் நிச்சயம் ஐ.பி.எல். அணிகளால் எடுக்கப்படுவேன் என்று கிறிஸ் ஜோர்டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து கிறிஸ் ஜோர்டான் கூறுகையில் ‘‘நான் மீண்டும் ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பிடித்துள்ளேன். நிச்சயமாக நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த சீசனில் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்னும் ஒருபடி மேலே செல்ல நாங்கள் விரும்பினோம். சிறப்பான அந்த தொடரை நான் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். நான் மீண்டும் ஏலத்திற்கு வருவேன். என்னை ஏலத்தில் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

‘மகிழ்ச்சி’: இந்திய அணியின் பீல்டிங்கை பாராட்டும் சச்சின் தெண்டுல்கர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மராத்தான் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது இன்றைய விளையாட்டு உலகில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், இந்திய அணியின் சிறப்பான பீல்டிங் குறித்தும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர் பேசும்போது ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் உலகளவில் சிறந்த பீல்டிங் அணியில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து வீரர்களும் பீல்டிங் செய்யும்முறையை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பீல்டிங் செய்கிறார்கள்.

நம்முடைய உடற்தகுதி வழக்கம் பொதுவாக சற்று வேறுபட்டது. அதில் விழிப்புணர்வு சற்று குறைந்த காணப்படுகிறது. அது நேரத்தின் அடிப்படையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் இந்த விஷயம் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வெளிப்புற விளையாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

தற்போதைய தலைமுறையினர் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. மக்கள் வெளியில் வந்து சில விளையாட்டுக்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இது மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்றார்.

இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம்: புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கான்பூரில் நடந்த 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழி தீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த முடியும். அந்த அணியின் ஜோர்டான் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குவார்.

இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ராகுலின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. ஒரு நாள் தொடரில் அவர் 24 ரன்களே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் முதல் போட்டியில் ஆடிய வீரர்களே இடம் பெற்று இருப்பார்கள்.

இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடனும், இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெபியை முந்திய செரீனா!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் தனது மூத்த சகோதரி வீனசை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினர். அவர் ஆஸ்திரேலியா ஓபனை 7-வது முறையாக வென்றார். ஒட்டு மொத்தமாக செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றிய 23-வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் அதிகம் பட்டம் வென்ற வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை முந்தினார். செரீனா 23 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7, பிரெஞ்சு ஓபன் 3, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 6) 2-வது இடத்தில் உள்ளார். ஸடெபிகிராப் 22 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 4, பிரெஞ்சு ஓபன் 6, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 5), 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க்ரெட் கோர்ட் 24 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலியா ஓபன் 11, பிரெஞ்சு ஓபன் 5, விம்பிள்டன் 3, அமெரிக்கா ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். இனி வரும் காலங்களில் மார்க்கரெட்டை முந்தி செரீனா புதிய வரலாறு படைப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இன்றைய ராசி பலன்கள் 29.01.2017

  • மேஷம்

    மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சு மங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உண ருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: காலை 11.30 மணி வரை சந்திரா ஷ் டமம் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனப்போர் வந்து நீங்கும். பிற்பகல் முதல் புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • கடகம்

    கடகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல் லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந் தன்மையை புரிந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். நம்பிக்கைக் குரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். போராட்டமான நாள்.

  • மீனம்

    மீனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சசிகலாவுக்கு பயத்தை ஏற்படுத்திய தீபாவின் அரசியல் பயணம்! வைரலாகும் வீடியோ

தீபாவின் அரசியல் பயணம் சசிகலாவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என தீபாவின் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும், கட்சியின் அடி மட்ட தொண்டர்கள், சில நிர்வாகிகள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான தீபாவுக்கு தான் கட்சியில் உரிமை உள்ளது என கூறிவருகிறார்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான தீபாவின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன்னர் கூடி அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். அவரும் தனது அரசியல் முடிவை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் திகதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து தீபாவின் ஆதரவாளர் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், தீபாவின் அரசியல் பயணம், சசிகலா தரப்புக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போது அவர் சமாதியில் நுழைய தீபாவுக்கு முதலில் தடை போடப்பட்டது. பின்னர் தான் அவர் போனார்.

இது கூட மன்னார்குடி கோஷ்டியின் வேலையாக தான் இருக்கும். ஆனால் நாங்கள் நிச்சயம் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் எனவும் 24ஆம் திகதி நோக்கி ஆவலுடன் காத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையில் தீபாவின் வீட்டில் திரண்ட ஆதரவாளர்கள் தீபாவை சின்னம்மா, சின்ன புரட்சி தலைவி என கோஷம் போடும் வீடியோ வெளியாகி மன்னார்குடி கோஷ்டியை இன்னும் கடுப்பேற்றியுள்ளது.