ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

r

நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம், 11-ம் நாள் வியாழக்கிழமை (27.07.2017) சுக்லபட்சத்து, பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், பரீகம் நாமயோகம், பாலவம் நாம கரணத்தில், சனி ஹோரையில், பஞ்ச பட்சியில் காகம், அரசுத் தொழில் செய்யும் நேரத்தில் ஜுவனம் நிறைந்த மந்த யோகத்தில், நண்பகல் மணி 12.39க்கு ஆயில்யம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சர வீடான கடகம் ராசியில் ராகு பகவானும், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் சர வீடான மகர ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள்.

இதுவரை பகை வீடுகளான சிம்மம், கும்பத்தில் ராகு, கேதுவாகிய பாம்பிரண்டும் அமர்வதால் நாடெங்கும் பணப் பற்றாக்குறை இருந்தது. இப்போது யோகம் தரும் வீடுகளில் இவ்விரண்டு கிரகங்களும் அமர்வதால் உலகெங்கும் பணத் தட்டுப்பாடு குறையும்.

ராகு தரும் பலன்கள்

கடகத்தில் ராகு அமர்வதால் பாரம்பரியமான தொழில்கள்மீது இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் அதிகரிக்கும். கடலில் கலக்கும் கழிவுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும். கடலில் அழிந்துவரும் பவழப் பாறைத்திட்டுகள் பாதுகாக்கப்படும். நாடெங்கும் புதிய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு மோகம் மக்களிடையே குறையும். மக்களின் அடிமனதில் இருந்துவரும் அச்சவுணர்வு விலகும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறை மேம்படும்.

செல்போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி அதிகரிப்பால் அவற்றின் விலை குறையும். இண்டர்நெட், மொபைல் போன் சேவைக்கான கட்டணம் அதிரடியாகக் குறையும். மிகக் குறைந்த செலவில் அதிக சேனல்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உருவாகும். அளவில் மிகச் சிறிய ஆனால், அதிகத் தொழில்நுட்பமுள்ள கேமராக்கள், ரோபோக்கள் அதிகம் வெளியாகும்.

காலப் புருஷத் தத்துவப்படி ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் மக்களிடையே சுக போகங்களை அனுபவித்துவிட வேண்டுமென்ற வேட்கை அதிகரிக்கும். மதுபான உற்பத்தியும் அருந்துவோரின் எண்ணிக்கையும் உயரும். மாரடைப்பு நோய்ப் பாதிப்பு பரவலாகும். பாரம்பரிய சின்னங்கள், மலைகள், காடுகள், நதிகளை மீட்கவும், பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியாகும்.

வாகனங்களின் விலை குறையும். வெளிர் நீலம், சில்வர் கிரே நிறங்களும், 2 மற்றும் 4-ம் எண்களும் அதிக வலிமை பெறும். வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருப்போர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் பல துறைகளிலும் சாதிப்பார்கள். மின்சாரத் தட்டுப்பாடு குறையும். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளை நேர்ப்படுத்த சட்டங்கள் வரும். வீட்டு வாடகை குறையும். குறைந்த விலையில் தரமான வீடுகள் கிடைக்கும்.

கேது தரும் பலன்கள்

கேது கும்ப ராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் தழைக்கும். நாடெங்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும். நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். பாகிஸ்தான், சீனாவுடன் போர் வரும். குறைந்த பட்ஜெட் சினிமாப் படங்கள் பிரபலமடையும். வரதட்சிணை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குக் கடுமையான சட்டம் வரும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நலிவடையும். அரசியலில் நாகரிகம் மெல்ல மெல்ல வரத் தொடங்கும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும். சிமெண்ட், மணல் விலை அதிகரிக்கும். குறைப் பிரசவங்கள், ஓரினச் சேர்க்கை அதிகமாகும். பால் விலை உயரும். எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி அடையும்.

ராகு கடந்து செல்லும் பாதை

27.7.2017 – 27.9.2017 வரை ஆயில்யம் 4-ல்

28.9.2017 – 29.11.2017 வரை ஆயில்யம் 3-ல்

30.11.2017 – 31.1.2018 வரை ஆயில்யம் 2-ல்

1.2.2018 – 4.4.2018 வரை ஆயில்யம 1-ல்

5.4.2018 – 3.6.2018 வரை பூசம் 4-ல்

4.6.2018 – 6.8.2018 வரை பூசம் 3-ல்

7.8.2018 – 8.10.2018 வரை பூசம் 2-ல்

9.10.2018 – 10.12.2018 வரை பூசம் 1-ல்

11.12.2018 – 13.2.2019 வரை

புனர்பூசம் 4-ல்

கேது கடந்து செல்லும் பாதை

27.7.2017 – 27.9.2017 வரை அவிட்டம் 2-ல்

28.9.2017 – 29.11.2017 வரை அவிட்டம் 1-ல்

30.11.2017 – 31.1.2018 வரை

திருவோணம் 4-ல்

1.2.2018 – 4.4.2018 வரை திருவோணம் 3-ல்

5.4.2018 – 3.6.2018 வரை திருவோணம் 2-ல்

4.6.2018 – 6.8.2018 வரை திருவோணம் 1-ல்

7.8.2018 – 8.10.2018 வரை உத்திராடம் 4-ல்

9.10.18 – 10.12.2018 வரை உத்திராடம் 3-ல்

11.12.2018 – 13.2.2019 வரை உத்திராடம் 2-ல்