புண்ணியத்தை பெருக்கும் வெள்ளெருக்கு

புண்ணியத்தை பெருக்கும் வெள்ளெருக்கு

சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது.

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர்.

ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.

சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் ‘சூரிய ஜெயந்தி’ சொல்லும் தாத்பரியமும் அதுதான். அந்த நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அந்த நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதியாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.

பொதுவாக எருக்கன் செடிகளில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

சரியான முறைகளில் தயாரிக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள், பிள்ளையார்பட்டி மற்றும் ஆடுதுறை சூரியனார் கோவில் ஆகிய இடங்களில் கிடைப்பதாக செய்தி உண்டு. அவ்வாறு வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.

பின்னர் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், அரைத்த மஞ்சள் கலவையை அதன் மேலாக பூசி வைக்க வேண்டும். அதற்கு அடுத்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், சந்தன கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகுதான் நன்மை செய்யும் கதிர் வீச்சுகள் அதிலிருந்து வெளிப்படும். பின்னர் அவரவருக்கு இஷ்டப்பட்ட பூஜைகளை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் விலகி விடுவதாக ஐதீகம்.

இறைவன் உறையும் திருமேனிகளான சிலைகளுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும் மலர்கள் பற்றி, ஆகமங்களும், ‘புஷ்ப விதி’ என்ற நூலும் பல விதிகளை குறிப்பிடுகின்றன. தோஷங் களற்ற, பூச்சி அரிக்காத, பறவை எச்சம் படாமல், விடியற்காலை நேரத்தில் பறிக்கப்பட்ட மலர்களால் இறைவனுக்கு பூஜை செய்வது விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. ‘நன் மாமலர்’ என்று ஞான சம்பந்தர் குறிப்பிடும் அத்தகைய அஷ்ட புஷ்பங்களில் ஒன்றாக வெள்ளெருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவை அஷ்ட புஷ்பங்கள் ஆகும். சிவபெருமானின் ஜடாமுடியில் வெள்ளெருக்கு அலங்கரிப்பதை, ‘வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை..’ என்று அப்பர் குறிப்பிடுவார். சிறு செடியாக இருந்து, குறுவகை மரமாக வளரும் தன்மை பெற்றது வெள்ளெருக்கு. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.

சென்னைக்கு பக்கத்தில் ஓரகடம் என்னும் ஊரில், வெள்ளெருக்கு விநாயகர் கோவில் இருக்கிறது. பொதுவாக கோவில் களில் உள்ள நந்தவனங்களில் வெள்ளெருக்கன் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. பூமிக்கு அடியில் அரிதான பொருட்கள் அல்லது புதையல் இருக்கும் இடத்தில் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுவது சுவாரசியமான செய்தியாகும். ‘வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே..’ என்ற பாடல் வரிகள் சங்க காலத்தில் பிர பலம்.

பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்குச் செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது.

அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படாது.

வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்தலாம். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாக உள்ளது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.