சட்டவிரோத போதைப்பொருட்களை தேடிக்கண்டுக்கும் நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதற்கு விசேட செயற்திட்டம்

p1

சட்டவிரோத போதைப்பொருட்களை தேடிக்கண்டுக்கும் நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதற்கு விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ‘போதைப் பொருட்களற்ற நாடு’ தேசிய செயற்திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருட்களற்ற நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது கூறினார்.
போதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயரமிக்கவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, மேலும் இவ்வாறான அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருட்களற்ற நாடு எனும் எண்ணக்கருவினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘போதைப் பொருட்களற்ற நாடு’ செயற்திட்டத்துடன் இணைந்ததாக நடைபெறும் மாவட்ட மீளாய்வு செயற்திட்டத் தொடரின் ஒன்பதாவது நிகழ்வு நேற்று பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
கம்பஹா, காலி, கேகாலை, கொழும்பு, குருநாகல், நுவரெலியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 8 மாகாணங்களில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய களுத்துறை மாவட்ட  செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வும் நேற்று நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விருது வழங்கலும், பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னம் சூட்டுதலும் ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்டன.
புகையிலை நிறுவனங்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள புகையிலை ஆய்வு நிலையத்தின் இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும், களுத்துறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் முக்கிய இதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.