போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அந்த நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ச உட்பட படை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
பலவந்தமாகக் காணாமல்போவதைத் தடுக்கும் சட்டவரைபு தொடர்பில் கருத்துத்தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ’பலவந்தமாக காணாமல்போவதைத் தடுத்தல் என்றொரு சட்டவரைபைக் கொண்டு வந்து அதனூடாகச் சூட்சுமமான முறையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் எமது படையினரையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் தண்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
காணாமல்போனோர் செயலகத்தை நிறுவுவதற்காக ஏற்கனவே சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் படையினருக்கு எதிரான முறைப்பாடுகள் சேகரிக்கப்படும்.
நீதிமன்ற அனுமதியின்றி வேண்டிய இடங்களுக்குச்சென்று தேடுதல் நடத்த முடியும்.இதற்குச் சாட்சியம் வழங்குபவர்கள் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை.
ஆனால், இலங்கையின் சாட்சிகள் சட்டத்தின்படி சாட்சியம் கூறுபவர் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். ஆனால், காணாமல்போனோர் செயலகச்சட்டத்தின்படி சாட்சி அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார். எங்கேயாவது இருந்து கொண்டு சாட்சியம் வழங்க முடியும். அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பின்பு பலவந்தமாகக் காணாமல்போவதைத் தடுக்கும் சட்டவரைபு நிறைவேற்றப்பட்டு அந்தச் சட்டத்தின் அடிப்படையில் முதலாவது போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டு மேற்படி சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகள் இந்த நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.
போருக்குத் தலைமை தாங்கிய மஹிந்த உட்படப் படை அதிகாரிகள் அனைவரும் அந்தநீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர். இறுதியில் தண்டிக்கப்படுவர் இதுதான் அரசின் திட்டம்’ என்றார்.