முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் காணி அற்ற மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானங்கள் எடுக்க முற்பட்டவேளை இணைத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சரும் அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சரில் ஒருவரான அனந்தி சசிதரனும் கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முல்லைத்தீவு கூழாமுறிப்புப் பகுதியில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலணிக் குழுவினால் முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் காணிகளைச் சென்று பார்வையிட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதனையடுத்து கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இடைநடுவில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2084 தமிழ் குடும்பங்களும், 902 முஸ்லிம் குடும்பங்களும், 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்குவதாகவும் தீர்மானம் எடுக்க முற்பட்ட போதே குறித்த கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் சமூகம் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், பாராபட்சம் காட்டுவதை அதிகாரிகளும் அரச தரப்பு அரசியல்வாதிகளும் தவிர்த்துக்கொண்டு முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுகின்ற கரிசனைபோல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் காட்டவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவனேசன், துரைராஜா ரவிகரன், புவனேஸ்வரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.