
இலங்கையின் முதலாவது இருதயமாற்று அறுவைச்சிகிச்சை கண்டி போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
திடீர் விபத்தொன்றால் மூளை முற்றாக செயலிழந்துபோன 29 வயதான இளைஞர் ஒருவரின் இருதயம் 40 வயதுப் பெண்ணொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
இருபது விசேட வைத்திய நிபுணர்களால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு ஆரம்பமான இந்த அறுவைச்சிகிச்சை சனிக்கிழமை அதிகாலை 3 மணிவரை தொடர்ச்சியாக எட்டு மணித்தியாலங்கள் நடந்துள்ளது எனவும், இருதய மாற்றீட்டைப் பெற்ற பெண் இப்போது அந்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூ காசல் பிரீமேன் வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஸ்டீபன் சீ. கிளார்க்கின் தலைமையில் நடந்த இந்த அறுவைச்சிகிச்சையில் வெலிசர மார்பு நோய் வைத்தியசாலை, பொரளை லேடி றிஜ்வே வைத்தியசாலை, பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, குருநாகல் போதன வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் இருபது விசேட வைத்திய நிபுணர்களும் முப்பது கனிஷ்ட வைத்தியர்களும், மயக்கமருந்துவியலாளர்களும், தாதியர்களும் பங்கேற்றனர் என கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.