ஒருநாள் கிரிக்கெட்: 9 சிக்சர்கள் விளாசி நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை

ஒருநாள் கிரிக்கெட்: 9 சிக்சர்கள் விளாசி நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை

இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46.5 ஓவரில் 144 ரன்னில் சுருண்டது. பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக எமி சட்டர்வையிட், ரசெல் பிரிஸ்ட் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

பிரிஸ்ட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷோபி டெவைன் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். டெவைன் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என பறந்தது.

27 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த டெவைன், 12-வது ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 41 பந்துகளை சந்தித்து 93 ரன்கள் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 7 பவுண்டரி, 9 சிக்சர்கள் அடங்கும்.

9 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 15 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க வீராங்கனை லைசல் லீ 7 சிக்சர்கள் விளாசி 2-வது இடத்தில் உள்ளார்.