பத்து வருடங்களாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயஇராம் இராமநாதன்  2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை, இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து விடுதலைப்புலிகள்  அமைப்பின் தலைமைக்குத் தகவல் வழங்கியமை, கடும் சேதம் விளைவிக்கக்கூடிய வெடிகுண்டுகளை உடமையில் வைத்திருந்தமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்கைளை முன்வைத்து ஜெயராம் இராமநாதனுக்கு எதிராகத் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் முக்இகய சான்றாக எதிரியால் சுயவிருப்பில்  பொலிஸாருக்கு வழங்கப்பட்டதாகக்  குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழக்குத் தொடுநரால் முன்வைக்கப்பட்டது. அது சுயமாகப்
வழங்கப்பட்டதா? என்பதனை உறுதிப்படுத்த நடைபெற்ற உண்மை விளம்பல் விசாரணையில் அரச தரப்பில் சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் தட்டெழுத்தாளர் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களில் பல முரண்பாடுகள் உள்ளமை உள்ளிட்ட விடயங்களைக் குறுக்கு விசாரணையில் எதிரியின் சார்பில் முன்னிலையாகிய மூத்த சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றின் கவனத்துக்குக்  கொண்டுவந்தார்.
“குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியிடமிருந்து சுயமாகப் பெறப்படவில்லை. எதிரிக்கு எதிராக வேறு சான்றுகள் முன்வைக்கப்பட வேண்டும்” என்று  கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க கட்டளையிட்டார்.
 எதிரிக்கு எதிராக வேறு சான்றுகள் இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்து நீதிபதி, எதிரியை மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தார்.
வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி விராஜ் வீரசூரியவும், எதிரி தரப்பில் சட்டத்தரணிகளான த.தம்பிராசா, அனோமா பிரியதர்சினியுடன் மூத்த சட்டத்தரணி கே.வி தவராசா ஆகியோர் முன்னிலையாகினர்.