புதிய உலக அதிசயம்..! 86 வயது மூதாட்டி கட்டிய செராமிக் அரண்மனை..!

புதிய உலக அதிசயம்..! 86 வயது மூதாட்டி கட்டிய செராமிக் அரண்மனை..!

சீனாவின் ஜிங்டெஸென் பகுதியில் வசிக்கும் 86 வயது யு எர்மெய், 5 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் அரண்மனையைக் கட்டியிருக்கிறார்! இந்தக் கட்டிடத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் செராமிக் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. “இது என்னுடைய லட்சியக் கட்டிடம். இதைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகின. இப்போதுதான் என் வாழ்க்கை முழுமையடைந்ததுபோல உணர்கிறேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் செராமிக் தொழிற்சாலைகளில்தான் வேலை செய்திருக்கிறேன். எனக்குத் தொழில் பற்றிய அனுபவம் கிடைத்தவுடன், ஒரு செராமிக் தொழிற்சாலையை ஆரம்பித்தேன்.

சாதாரணமாக இருந்த எங்கள் குடும்பம், பணக்காரக் குடும்பமாக மாறியது. அதனால் செராமிக் மீது ஆர்வமும் மரியாதையும் அதிகரித்தது. கடந்த 30 ஆண்டுகளாக செராமிக் பொருட்களைச் சேகரித்து வந்தேன். தட்டுகள், ஜாடிகள், கோப்பைகள், ஓவியங்கள், பாத்திரங்கள், ஜன்னல்கள் என்று 60 ஆயிரம் பொருட்கள் சேர்ந்தவுடன் இந்த அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தேன். 1,200 சதுர மீட்டர்கள் கொண்ட வட்ட வடிவிலான இந்தக் கட்டிடத்துக்கு, 80 டன் உடைந்த செராமிக் துண்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். என் வாழ்க்கைக்குப் பிறகும் செராமிக் புகழைச் சொல்லிக்கொண்டு இந்தக் கட்டிடம் நின்றுகொண்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்கு வரும்போது, அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையும் மேம்படும்” என்கிறார் யு எர்மெய்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த 33 வயது டெய்லர் முல், பாடகராகவும் மாடலாகவும் இருக்கிறார். மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவரது உடல், இரண்டு நபர்களின் பண்புகளைப் பெற்றிருக்கிறது. இரண்டு நோய் எதிர்க்கும் அமைப்புகள், இரண்டு ரத்த ஓட்டங்கள் இவருக்குள் இருக்கின்றன. இவரது தோலின் நிறம் கூட இரண்டு வகையாக அமைந்திருக்கிறது. “2009-ம் ஆண்டு ஓர் ஆவணப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கிமேரிசம் என்ற குறைபாட்டை அறிந்தேன். அதில் பார்த்த அத்தனை விஷயங்களும் என்னிடம் இருந்தன. உடனே மருத்துவப் பரிசோதனை செய்தேன்.

குறைபாடு உறுதியானது. உலகிலேயே நூறு பேருக்குதான் இந்தக் குறைபாடு இருக்கிறது. அவர்களுக்கும் உள் உறுப்புகளில்தான் ஏதாவது வித்தியாசம் இருக்கும். ஆனால் இரண்டு நபர்களின் பண்புகள் ஒரே உடலில் இருப்பதும் அது வெளிப்படையாகத் தெரிவதும் எனக்கு மட்டும்தான். என் வயிற்றின் ஒரு பாதி சிவந்த நிறமாகவும் இன்னொரு பாதி வெள்ளையாகவும் சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. மிகப் பெரிய மச்சம் என்று நினைத்துக்கொண்டோம். ஆனால் எனக்குச் சின்ன வயதிலிருந்தே இரட்டைப் பிறவி என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. 6 வயதில் என் அம்மாவிடம் நான் இரட்டைக் குழந்தையா என்று கேட்டபோது அவர் குழப்பமடைந்தார். இப்போதுதான் தெரிகிறது, பிறக்காத என் சகோதரியின் பண்புகள் கருவிலேயே என்னுடன் கலந்துவிட்டன. இந்தக் குறைபாட்டால்தான் எனக்கு அளவுக்கு அதிகமான ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி, உதிரப் போக்கு போன்றவை எல்லாம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினார்கள்” என்கிறார் டெய்லர் முல்.